டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு : 6,491 காலி இடங்களுக்கான குரூப்-4 தேர்வு - செப்டம்பர் மாதம் 1ந்தேதி நடக்கிறது


டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு :  6,491 காலி இடங்களுக்கான குரூப்-4 தேர்வு - செப்டம்பர் மாதம் 1ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 15 Jun 2019 12:02 AM GMT (Updated: 15 Jun 2019 12:02 AM GMT)

6 ஆயிரத்து 491 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி நடக்கிறது என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

சென்னை, 

2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அமைச்சுப்பணி, நீதி அமைச்சுப்பணி, நில அளவை, நில பதிவேடுகள் சார் நிலைப்பணி, தலைமை செயலகப்பணி மற்றும் சட்டமன்ற பேரவை செயலக பணிகளில் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-4 (குரூப்-4 தேர்வு)-க்கு www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி கடைசி நாள் ஆகும். அடுத்த மாதம் 16-ந்தேதிக்குள் தேர்வு கட்டணங்கள் செலுத்த வேண்டும். எழுத்து தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி நடைபெற இருக்கிறது.

விண்ணப்பதாரர்கள் பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களுடைய அடிப்படை விவரங்களை நிரந்தரபதிவு மூலமாக (ஓ.டி.ஆர்.) கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது ஆகும். அதன்பிறகு உரிய கட்டணத்தை செலுத்தி புதுப்பித்து கொள்ள வேண்டும்.

மொத்தம் 6 ஆயிரத்து 491 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடக்க இருக்கிறது. காலிப்பணியிடங்கள் விவரம் வருமாறு:-

கிராம நிர்வாக அலுவலர் - 397, இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) - 2,688, இளநிலை உதவியாளர் (பிணையம்) - 104, வரித்தண்டலர் (நிலை-1) - 34, நில அளவர் - 509, வரைவாளர் - 74, தட்டச்சர் - 1,901, சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை-3) - 784.

தேர்வுக்கான கட்டணமான ரூ.100-ஐ இணைய வழியில் செலுத்த வேண்டும் அல்லது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய இணையவழி விண்ணப்பத்தில் தேர்வு செய்தவாறு விண்ணப்பம் சமர்ப்பித்த 2 நாட்களுக்குள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி. வங்கி, அஞ்சல் அலுவலகம் மூலம் செலுத்த வேண்டும்.

வங்கி அல்லது அஞ்சல் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்தும்போது, அம்முகமைகளுக்கு உரிய சேவை கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

14.6.2019 நாளிட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் போதுமான தமிழ் அறிவு பெற்று இருக்க வேண்டும். பொது அறிவு 75 வினாக்கள், திறனறிவு 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்கள் என மொத்தம் எழுத்து தேர்வு 200 வினாக்கள் கொண்டதாக இருக்கும்.

200 வினாக்களுக்கு 300 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டினை (ஹால்டிக்கெட்) டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது.

தேர்வு தொடர்பான மேலும் தகவல்கள் பெற, 18004251002 என்ற டி.என்.பி.எஸ்.சி.-யின் கட்டணமில்லா சேவை எண்ணுக்கு வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். அதேபோல், co-nt-a-ctt-n-psc@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் உரிய தகவலை பெறலாம்.

இந்த தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பம் அனுப்பும்போது, எந்த வித ஆவணமும் அனுப்ப தேவையில்லை. தேர்வாணையம் கேட்கும்போது, கண்டிப்பாக உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றாலும், பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் தெளிவு இல்லாமலும், வாசிக்க ஏதுவாக இல்லாமல் இருந்தாலும் எந்தவித முன்னறிவிப்புமின்றி விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story