வறட்சியை சமாளிக்க சரியான நடவடிக்கை இல்லை: லாரிகளில் எத்தனை காலத்திற்கு தான் தண்ணீர் வழங்க முடியும்? தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி


வறட்சியை சமாளிக்க சரியான நடவடிக்கை இல்லை:  லாரிகளில் எத்தனை காலத்திற்கு தான் தண்ணீர் வழங்க முடியும்?  தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி
x
தினத்தந்தி 15 Jun 2019 11:01 PM GMT (Updated: 15 Jun 2019 11:01 PM GMT)

வறட்சியை சமாளிக்க சரியான நடவடிக்கை இல்லை என்றும், லாரிகளில் எத்தனை காலத்திற்கு தான் தண்ணீர் வழங்க முடியும் என்றும் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வரும்முன் காப்பது தான் ஒரு நல்ல அரசின் கடமை. வந்தபின் யோசிப்பதற்கு அரசு தேவையில்லை. மக்கள் அதனை முடிவு செய்து கொள்வார்கள். தண்ணீர் பிரச்சினையை எப்படி தீர்க்கலாம் என்பது பற்றி இந்த அரசுக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை, அவர்களுக்கு உள்ள ஒரே கவலை ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்பது தான். பிறகு எப்படி மக்களை பற்றி அவர்கள் கவலைப்படுவார்கள். தவித்த வாய்க்கு இந்த அரசு தண்ணீர் கொடுக்க தயாராக இல்லை.

பல மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்து வினியோகம் செய்யலாம். பக்கத்து மாநில முதல்-மந்திரிகளிடம் பேசி தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்கலாம். இப்படி ஏதாவது முயற்சியை செய்ய வேண்டும் அல்லவா? ஆனால் எதையும் அவர்கள் செய்யவில்லை.

ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் வருகிறது என்று 10 நாட்களுக்கு முன்பே சொன்னார்கள். இன்னும் வரவில்லை. ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் சென்னை வர 10 நாள் ஆகுமா?. தலைமை செயலகத்தில் இருந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தால் தண்ணீர் வந்து விடுமா?. மக்களின் நிலை அறிந்து போர்க்கால அடிப்படையில் தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லாரி மூலமாகவே தண்ணீர் கொடுத்து விடலாம் என்று ஒரு அரசு நினைத்தால் அதை விட மோசமான முடிவு எதுவும் இருக்க முடியாது. எவ்வளவு காலத்திற்கு தான் லாரி மூலம் தண்ணீர் கொடுப்பீர்கள். தமிழகத்தில் உள்ள ஏரிகளை நீங்கள் ஆழப்படுத்தி வைத்திருந்தால் இப்போது தண்ணீர் இல்லாமல் இருந்திருக்காதே.

மழை நீரை ஏன் சேமிக்க முடியவில்லை. ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும். புதியதாக ஏரி குளங்களை அமைக்க வேண்டியதில்லை. இருக்கும் ஏரி, குளங்களை ஆழப்படுத்தினாலே போதும். ஆனால் அதைக்கூட அவர்கள் செய்யவில்லை. 3 அங்குலம் ஆழத்திற்கு தான் தோண்டுகிறார்கள். பிறகு எப்படி தண்ணீரை சேமிக்க முடியும். இதற்கு கோடிக்கணக்கில் நிதியை செலவிடுகிறார்கள். இதற்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே சென்றது. முறையாக திட்டத்தை செயல்படுத்தினால் தண்ணீர் பஞ்சமே வராது.

ரஜினிகாந்த் சிறந்த நடிகர், உழைப்பாளி. மக்களை கவர்ந்தவர். அந்த அடிப்படையில் பள்ளி பாடத்திட்டத்தில் அவரின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ளது. இதையும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் சில விஷயங்களையும் முடுச்சு போட்டு பார்க்க கூடாது. எல்லா தலைவர்களுக்கும் சில பழக்கவழக்கங்கள் இருக்கும். அதை வைத்து எடை போடக்கூடாது.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படும். மக்கள் குறைகளை தீர்க்க தொடர்ந்து பாடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் உடன் இருந்தார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். 

Next Story