சென்னையில் போலீஸ் துப்பாக்கி குண்டுக்கு பலியான ரவுடிகள்


சென்னையில் போலீஸ் துப்பாக்கி குண்டுக்கு பலியான ரவுடிகள்
x
தினத்தந்தி 16 Jun 2019 12:07 AM GMT (Updated: 16 Jun 2019 12:07 AM GMT)

சென்னையில் போலீஸ் துப்பாக்கி குண்டுக்கு பல ரவுடிகள் பலியாகி உள்ளனர்.

சென்னை, 

சென்னையில் 1980-ம் ஆண்டுக்கு பிறகு தான் ரவுடி கலாசாரம் பெரியளவில் தலைதூக்கியது. ஆரம்பத்தில் ரவுடிகள் ‘பிளேடை’ பயன்படுத்தினார்கள். பின்னர் கத்தி, அரிவாள், துப்பாக்கி, வெடிகுண்டு என்று ஆயுதங்களை கையில் எடுக்க தொடங்கினார்கள்.

வடசென்னையில் சேரா, ‘கேட்’ ராஜேந்திரன், காட்டான் சுப்பிரமணியம், வெள்ளை ரவி உள்பட ரவுடிகளும், மத்தியசென்னையில் அயோத்திக்குப்பம் வீரமணி, குண்டு திருநாவுக்கரசு உள்பட ரவுடிகளும், தென்சென்னையில் பங்க் குமார், ராட்டின குமார், குரங்கு குமார், குள்ள ரவி உள்பட ரவுடிகளும் கலக்கினார்கள்.

இதில் அயோத்திக்குப்பம் வீரமணி கடற்கரை பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனராக விஜயகுமார் பதவி ஏற்றவுடன், ரவுடிகள் கொட்டத்தை அடக்கினார். அவர் கமிஷனராக இருந்தபோது அயோத்திக்குப்பம் வீரமணி உள்பட 16 ரவுடிகள் ‘என்கவுண்ட்டர்’ முறையில் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

தற்போதைய டி.ஜி.பி. ஜாங்கீட், சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்தபோது பங்க் குமார், வெள்ளை ரவி ஆகிய 2 ரவுடிகளையும், அவர் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்தபோது, தமிழகத்தில் எம்.எல்.ஏ. உள்பட 26 கொலை வழக்குகளில் தொடர்புடைய வடநாட்டு பவாரியா கொள்ளையர்கள் 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.

சென்னை புறநகர் பகுதி செங்கல்பட்டு கிழக்கு போலீஸ் மாவட்டமாக இருந்தது. அப்போது நீலாங்கரை கடற்கரையில் ஓவியர் ஒருவர் தனது மனைவியுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அவரது மனைவியை 4 குறவர்கள் கத்திமுனையில் கடத்தி சென்று கற்பழித்தனர்.

அந்த குற்றவாளிகளை ஓவியர் படம் மூலம் வரைந்து அடையாளம் காட்டினார். பொன்.மாணிக்கவேல் அந்த 4 குறவர்களையும் ‘என்கவுண்ட்டர்’ செய்தார். தாம்பரம் பகுதியிலும் 2 ரவுடிகள் பொன்.மாணிக்கவேல் துப்பாக்கி குண்டுக்கு பலியாகினர். அதே போல கொள்ளையர் சின்னமாரியும் பொன்.மாணிக்கவேல் என்கவுண்ட்டருக்கு பலியானார்.

தற்போதைய டி.ஜி.பி. திரிபாதி, தென்சென்னை இணை கமிஷனராக இருந்தபோது நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளையடித்த முருகேசன் என்பவரை ‘என்கவுண்ட்டர்’ செய்தார். திரிபாதி சென்னை போலீஸ் கமிஷனராக கடந்த 2012-ம் ஆண்டு இருந்தபோது, சென்னையை கலக்கிய வடமாநில வங்கி கொள்ளையர்கள் 5 பேரை அவரது தலைமையிலான போலீஸ் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

போலீசார் என்கவுண்ட்டருக்கு பயந்து பல ரவுடிகள் திருந்தி வாழ தொடங்கினர். பல ரவுடிகள் ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கு ஓடி விட்டனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் (21) என்ற ரவுடி போலீஸ்காரர் ராஜவேலுவை அரிவாளால் வெட்டி தன்னை பெரிய ரவுடியாக காட்டிக் கொள்ள முயன்றார்.

தரமணியில் பதுங்கி இருந்த அவரையும் போலீசார் என்கவுண்ட்டர் முறையில் சுட்டு வீழ்த்தினார்கள். சென்னையில் ரவுடி கலாசாரம் மீண்டும் தலைதூக்கி விடக் கூடாது என்பதில் போலீசார் கவனமாக இருக்கிறார்கள். இந்தநிலையில் போலீஸ்காரர் பவுன்ராஜை வெட்டி தானும் பெரிய ரவுடி என்று சென்னையில் வலம் வர திட்டமிட்டிருந்த ரவுடி வல்லரசு போலீஸ் என்கவுண்ட்டருக்கு பலியாகி இருக்கிறார்.

தற்போது சென்னை போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் பதவி காலத்தில் கடந்த ஆண்டு ஆனந்தன், தற்போது வல்லரசு ஆகிய 2 ரவுடிகள் மீது என்கவுண்ட்டர் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் எப்போதுமே ஆதரவு இருக்கிறது.

எனவே போலீசார் என்கவுண்ட்டர் நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்கவே செய்கிறார்கள்.

Next Story