தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் ரூ.100 முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் ரூ.100 முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Jun 2019 12:00 AM GMT (Updated: 16 Jun 2019 10:16 PM GMT)

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன் படுத்தினால் இன்று முதல் அபராதம் விதிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறைந்தது ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதில், பிளாஸ்டிக் தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் பாக்கெட், உறிஞ்சு குழல், கைப்பை உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

இந்த தடை உத்தரவை தொடர்ந்து, சாலையோர உணவகங்கள், ஓட்டல்களில் பயன்பாட்டில் இருந்த பிளாஸ்டிக் பைகள், தட்டுகள் குறையத் தொடங்கியது. வாழை இலைக்கு மீண்டும் மவுசு ஏற்படத் தொடங்கியது. கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்களும் வீட்டில் இருந்தே பைகளை எடுத்துச் சென்றனர். ஓட்டல்களுக்கும் பாத்திரங்களை எடுத்துச் சென்று உணவு பொருட்களை வாங்கி வந்தனர்.

ஆனால், அரசின் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை எதிர்பார்த்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தாததால், மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வழங்கி வருகின்றனர். சாலையோர உணவகங்களில், மீண்டும் பிளாஸ்டிக் கவர்களில் உணவு வழங்கப்படுகிறது.

இந்தநிலையில், பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மேலும் துரிதப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் முதல்முறை பிடிபடும்போது ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 2-வது முறை பிடிபடும் போது அபராத தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி வசூலிக்கப்படும். மீண்டும் அதே நிறுவனம் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால் அந்த நிறுவனம் ‘சீல்’ வைத்து மூடப்படும்.

இதேபோல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்தாலோ, வழங்கினாலோ அல்லது எடுத்துச் சென்றாலோ முதல்முறை ரூ.1 லட்சமும், மீண்டும் பிடிபட்டால் ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அதே குற்றத்தை செய்தால் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை அல்லது வினியோகம் செய்தால், முதல்முறை பிடிபடும்போது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் பிடிபட்டால் அபராத தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தி வசூலிக்கப்படும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வணிக ரீதியில் பயன்படுத்துவோருக்கு முதல்முறை ரூ.25 ஆயிரமும், 2-வது முறை பிடிபட்டால் ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அதே தவறை செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

சிறிய கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் முதல் முறை ரூ.100, 2-வது முறை ரூ.200, 3-வது முறை ரூ.500 என அபராதம் வசூலிக்கப்படும். அதன் பிறகும் தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வீடுகளில் பயன்படுத்தினாலும் அபராதம் வசூலிக்கப்படும். பிடிபடுவது முதல் முறையாக இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும்.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை, அபராதம் விதிப்பதற்கு மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும், வார்டு வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பிற மாநகராட்சி பகுதிகளிலும், மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட நாளான ஜனவரி 1-ந் தேதி முதல் இதுவரை 250 டன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story