‘நீட்’ தேர்வின் நோக்கம் நிறைவேறியுள்ளதா? ஆய்வு செய்ய வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


‘நீட்’ தேர்வின் நோக்கம் நிறைவேறியுள்ளதா? ஆய்வு செய்ய வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Jun 2019 10:00 PM GMT (Updated: 16 Jun 2019 10:45 PM GMT)

‘நீட்’ தேர்வின் நோக்கம் நிறைவேறியுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடப்பாண்டில் இந்தியா முழுவதும் சுமார் 65 ஆயிரம் மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. ஆனால், இந்த ஆண்டில் ‘நீட்’ தேர்வு எழுதிய 14 லட்சத்து 10 ஆயிரத்து 755 பேரில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நியாயமான முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், இவர்களில் முதல் 65 ஆயிரம் இடங்களைப் பெற்றவர்களுக்கு மட்டும் தான் இடம் கிடைக்க வேண்டும். ஒருவேளை இடஒதுக்கீட்டுக் கணக்கின்படி பார்த்தாலும் முதல் ஒரு லட்சம் இடங்களுக் குள் வந்தவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி சாத்தியமாக வேண்டும்.

ஆனால், முதல் 50 ஆயிரம் இடங்களுக்குள் வந்தவர்களுக்குக்கூட இடம் கிடைப்பதில்லை; அதேநேரத்தில் 7 லட்சத்திற்கு அதிகமான தரவரிசையில் வந்தவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கிறது. இதற்குக் காரணம் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஓராண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவது தான். ‘நீட்’ தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்களில் பலர் அந்த கட்டணத்தைக் கட்ட முடியாமல் விலகிக்கொள்ள, கோடிகளை குவித்து வைத்திருக்கும் பலர் 15 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண்களை மட்டுமே எடுத்திருந்தாலும், பணத்தைக் கட்ட முடியும் என்பதால் மிக எளிதாக சேர்ந்து விடுகின்றனர். மொத்தத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவப் படிப்புக்கு கோடிகளை கொட்டும் மாணவர்களை பிடித்துத் தரும் வேலையைத் தான் ‘நீட்’ தேர்வு செய்கிறது.

கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய சமூகநீதியில் அக்கறை கொண்ட வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும். அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வது பற்றி முடிவெடுக்க வேண்டும்.

இதைச் செய்ய மத்திய அரசு தவறும் பட்சத்தில் ‘நீட்’ தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் தமிழக அரசு, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பு மனுவைத் தாக்கல் செய்து ‘நீட்’ தேர்வை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story