எதிர்மறை கருத்துகளை கூறி அரசியல் கட்சியினர் ஆதாயம் தேடுகிறார்கள் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு


எதிர்மறை கருத்துகளை கூறி அரசியல் கட்சியினர் ஆதாயம் தேடுகிறார்கள் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 Jun 2019 9:45 PM GMT (Updated: 16 Jun 2019 10:50 PM GMT)

கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சியினர் எதிர்மறை கருத்துகளை கூறி ஆதாயம் தேடுகிறார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களிடம் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி கருத்து கேட்பு கூட்டம் ராதாபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சஞ்சய்குமார் மற்றும் அதிகாரிகளை செட்டிகுளம் அணுவிஜய் நகரியத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அணுக்கழிவுகள் சேமிப்பது குறித்து அவர்களிடம் விளக்கங்களை கேட்டறிந்தார். அணுமின் நிலைய அதிகாரிகள், அணுஉலையின் செயல்பாடு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவுகள் கொட்டப்படுகிறது, புதைக்கப்படுகிறது என்றும், அதனால் அபாயகரமான கதிர்வீச்சு பரவுகிறது என்றும், இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களில் இருந்தும் கழிவுகளை கொண்டு வந்து இங்கு கொட்டப்போவதாகவும் கருத்துகள் பரவி வருகிறது. இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த அச்சத்தை போக்குவதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வு தேவை.

எப்போதுமே அரசியலில் ஒரு பிரச்சினை வந்தால் நேர்மறையான கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும். எதிர்மறையான கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் துரதிர்ஷ்டவசமாக எதிர்மறை கருத்துகளை கூறி அதன்மூலம் அரசியல் கட்சியினர் ஆதாயம் தேடுவது அதிகரித்து வருகிறது.

கூடங்குளம் அணுஉலை தொடர்பாக அணுமின் நிலைய அதிகாரிகளுடன் நீண்ட விவாதம் நடத்தினோம். அப்போது கதிர்வீச்சு, சுனாமியால் பாதிப்பு உண்டா? கடல் உயிரினங்களுக்கு பாதிப்பு உண்டா? அணுக்கழிவால் பாதிப்பு உண்டா? என முழுமையாக விவாதிக்கப்பட்டது. இங்குள்ள அணுக்கழிவுகளை சேமிப்பதற்கு 2022-ம் ஆண்டு வரை அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கழிவுகளை 7 வருடம் கழித்துதான் வெளியே கொண்டு வரவேண்டும்.

இப்போது அதற்கு கால அவகாசம் இருக்கிறது. வெளியில் கழிவுகளை சேமிப்பதற்கு ஒரு கிடங்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு உச்சநீதிமன்றத்தில் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்கும்போது பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்காக வருகிற ஜூலை மாதம் 10-ந் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்த இருக்கிறார்கள். இந்த கழிவுகளை சேமிப்பதால் எந்தவித ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் எதை எடுத்தாலும் எதிர்மறை கருத்துகளை கூறி போராட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கு முன்பாகவே என்னவென்று தெரியாமல் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி போராட்டம் அறிவிப்பது வேதனையளிக்கிறது. பொதுமக்களிடம் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்த வேண்டாம். பொதுமக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story