வீட்டில் ரூ.1 கோடி கஞ்சா பதுக்கல் கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


வீட்டில் ரூ.1 கோடி கஞ்சா பதுக்கல் கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Jun 2019 10:45 PM GMT (Updated: 16 Jun 2019 10:55 PM GMT)

நாகையில் உள்ள ஒரு வீட்டில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பதுக்கிய கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் நாகையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நாகை வெளிப்பாளையம் தர்ம கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு அட்டை பெட்டிகளில் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுபற்றி போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த மூக்கையா மனைவி ராணி, அவருடைய மகன் ஆனந்த், ஆனந்த் மனைவி மீனாட்சி ஆகிய 3 பேரும் கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக ராணி, ஆனந்த், மீனாட்சி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

ஆந்திரா மாநிலத்தில் இருந்து நாகைக்கு கஞ்சாவை கடத்தி வந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பதுக்கி வைத்துள்ளனர். இங்கிருந்து கஞ்சாவை பொட்டலம் போட்டு நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

அதேபோல் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை சவுக்கு பிளாட் பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கு 150 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என தெரிகிறது. இதுகுறித்து கடலோர காவல்குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை பதுக்கி வைத்தவர்கள் யார்? இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story