சென்னை,
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், பிளாஸ்டிக் பொருட் களின் தடை அறிவிப்பின் மீதான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் அரசால் அந்த பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டன.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்தபின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களை ஆய்வு செய்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுவது பற்றியும், அவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய ஏற்கனவே அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், அரசின் ஆணையை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தி, சுற்றுச்சூழலை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது மற்றும் பயன்படுத்துவோர் மீது மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிக்கர் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட் களை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வு கூட்டத்தில் நகராட்சி நிர்வாக கமிஷனர் கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் இதுவரை தடை செய்யப்பட்ட 820.50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரூ.1 கோடியே 58 லட்சத்து 69 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.