அமைச்சர்களின் வீடுகளில் அதிகளவு தண்ணீர் என்பது தவறான தகவல் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


அமைச்சர்களின் வீடுகளில் அதிகளவு தண்ணீர் என்பது தவறான தகவல் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 21 Jun 2019 8:54 AM GMT (Updated: 21 Jun 2019 8:54 AM GMT)

அமைச்சர்களின் வீடுகளில் அதிகளவு தண்ணீர் என்பது தவறான தகவல் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில்  ஆய்வுக்கூட்டம் தொடங்கியது. குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.  தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்  கூறியதாவது:-

தேர்தல் வந்ததால் அரசு செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் நடத்தை விதிகள் முடிந்ததும் உடனடியாக கூட்டம் போட்டு, நிதி ஒதுக்கி குடிநீர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டோம்.

முடிந்த அளவுக்கு துரித நடவடிக்கை எடுத்து உரிய நீர் வழங்கப்படுகிறது. அதிகாரிகளை நியமனம் செய்து குடிநீர் பிரச்சினையை கண்காணிக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.158.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், நிலத்தடி நீர், குவாரிகளில் எடுக்கும் நீர் ஆகியவற்றை சேகரித்து தண்ணீர் வழங்கி வருகிறோம். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  அதிகளவில் டேங்கர் லாரிகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் நாள் ஒன்றுக்கு 9800 நடைகள், தண்ணீர் லாரிகள் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதை மேலும் அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு ஏரிகளும் வறண்டு விட்டன. ஆனாலும் சென்னை மக்களுக்கு தேவையான நீரை கொடுத்து வருகிறோம். 

12 டிஎம்சி நீர் கிருஷ்ணா நதியில் இருந்து வர வேண்டும். ஆனால் 2 டிஎம்சி நீர் மட்டுமே கிடைத்தது. 

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முன்வந்த கேரள முதல்வருக்கு வாழ்த்துக்கள். நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க கேரள அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கேரளா கொடுப்பதாக சொல்லும் தண்ணீர் நமக்கு போதுமானதாக இருக்காது.

பள்ளிகள், விடுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. பள்ளிகள், மருத்துவமனைக்கு முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை கேரளா தந்தால் நன்றாக இருக்கும். இது குறித்து கேரள முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளேன்.

காவிரி ஆணையம் கலைக்கப்படும், மேகதாதுவில் அணை கட்டப்படும் என பரப்புரையில் ராகுல் பேசியதற்கு ஸ்டாலின் கூறும் பதில் என்ன ?

நமக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா தர மறுக்கிறது. மேகதாது அணை கட்டினால்  தற்போது வரும் தண்ணீரும் வராது.

முதல்வரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்,  அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி : அமைச்சர்களுக்கு மட்டும் கேட்டவுடன் இரண்டு லாரி தண்ணீர் கிடைக்கிறதே ?

பதில்  : தவறான செய்தி. உங்களுக்கு எப்படி கிடைக்கிறதோ, அதே போல் எனக்கும், அமைச்சர்களுக்கும் கிடைக்கிறது. அமைச்சர்கள் வீடுகளுக்கு 2 லாரி தண்ணீர் வழங்கப்படுவதாக வெளியான செய்தி தவறானது. 

கேள்வி : மெட்ரோ லாரியில் பதிவு செய்தால் 25 நாட்களுக்கு பின்னரே தண்ணீர் கிடைக்கிறது. தனியார் லாரிகள் அதிக பணம் வாங்குகிறார்களே? 

பதில்:  அடுக்கு மாடியில் இருப்போர் அனைவரும் தனித்தனியாக பதிவு செய்கிறார்கள். ஏழை மக்கள் என்ன செய்வார்கள்? கட்டண உயர்வு தொடர்பாக டேங்கர் உரிமையாளர்களிடம் பேசப்படும்.

அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து பிரித்தே அம்மா குடிநீர் பாட்டில்கள் அனுப்பப்படுகின்றன. அம்மா குடிநீரை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள் .

குடிநீர் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தரமற்ற, அதிக விலைக்கு தண்ணீரை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Next Story