கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் கள்ளக்காதலால் நடந்த கொலைகள் 1,311 : ஐகோர்ட்டில், டி.ஜி.பி. அறிக்கை தாக்கல்


கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் கள்ளக்காதலால் நடந்த கொலைகள் 1,311 : ஐகோர்ட்டில், டி.ஜி.பி. அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 21 Jun 2019 10:53 PM GMT (Updated: 22 Jun 2019 5:22 AM GMT)

தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் கள்ளக்காதலால் 1,311 கொலைகள் நடந்துள்ளன என்று சென்னை ஐகோர்ட்டில் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்தார்.

சென்னை,

கள்ளக்காதல் காரணமாக சென்னை வில்லிவாக்கத்தில் ரவுடி கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த மற்றொரு ரவுடி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கள்ளக்காதல் பெருகிவிட்டதாகவும், இதனால் பெரியவர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளும் கொலை செய்யப்படுகின்றனர் என்று வேதனை தெரிவித்தனர்.

பின்னர், கள்ளக்காதல் விவகாரத்தில் நடைபெறும் கொலை மற்றும் இதர குற்றங்கள் குறித்து 25 கேள்விகளை கேட்டு மார்ச் 5-ந்தேதி பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஜி.பி. சார்பில், உதவி ஐ.ஜி. மகேஸ்வரன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்காதல் காரணமாக 2009-ம் ஆண்டு முதல் தற்போது வரை கடந்த 10 ஆண்டுகளில் சென்னையில் 158 கொலைகள் நடந்துள்ளன. தமிழகம் முழுவதும் 2009-ம் ஆண்டு 106 கொலைகளும், 2010-ம் ஆண்டு 125, 2011-ம் ஆண்டு 132, 2012-ம் ஆண்டு 126, 2013-ம் ஆண்டு 122, 2014-ம் ஆண்டு 134, 2015-ம் ஆண்டு 131, 2016-ம் ஆண்டு 138, 2017-ம் ஆண்டு 116, 2018-ம் ஆண்டு 134, 2019-ம் ஆண்டில் நேற்று வரை 47 என்று கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 1,311 கொலைகள் நடந்துள்ளன.

கள்ளக்காதல் கொலை குற்றத்தை தவிர்த்து பிற குற்றங்கள் சென்னையில் 213-ம், தமிழகம் முழுவதும் 621-ம் கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். ‘கள்ளக்காதலால் ஒவ்வொரு நாளும் குற்றச்செயல்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. 9 மாத குழந்தை என்ன செய்தது?. அந்த குழந்தையையும் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதற்கு காரணம் ஆபாச படங்கள்தான் என்று சொல்லப்படுகிறது. இந்த படங்கள் செல்போனில் எளிதாக பார்க்க முடிவதால், பெண்களும், குழந்தைகளும் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர்’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மார்ச் மாதம் நாங்கள் கேட்ட கேள்விகளில், 2 கேள்விகளுக்கு மட்டுமே டி.ஜி.பி. பதில் அளித்துள்ளார். எனவே, அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதிலை அவர் அளிக்க வேண்டும். மத்திய அரசும், அதுபோல பதில் அளிக்க வேண்டும்.

கள்ளக்காதலால் பெற்ற குழந்தையை தாய் கொலை செய்கிறாள். தினமும் பத்திரிகைகளில் இதுதொடர்பான செய்தி வந்து கொண்டே தான் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களால், குடும்பமும், திருமண உறவும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய பிரச்சினையை சாதாரணமாக எண்ணாமல், மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கில், ஏன் இந்த குற்றச்செயலில் குற்றவாளி ஈடுபட்டான்?, என்ன காரணம்? என்பதை போலீசார் கண்டறிய வேண்டும். அதுதொடர்பாக அறிக்கையை தயாரித்து அரசுக்கு போலீசார் அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான், இதுதொடர்பாக அரசு சட்டத்தை இயற்றி, குற்றத்தை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கும்.

பாலியல் பலாத்கார வழக்கில், குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கில், ஆபாச படம்தான் முக்கிய காரணமாக உள்ளன. எனவே, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை ஜூலை 5-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Next Story