மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும்; மு.க. ஸ்டாலின்


மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும்; மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 24 Jun 2019 11:05 AM GMT (Updated: 24 Jun 2019 11:05 AM GMT)

மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்டுவதற்கு திட்டமிட்டு உள்ளது. இந்த புதிய அணை கட்டுவதன் மூலம் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக 4.75 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் கிடைக்கும் என கூறியுள்ள கர்நாடக அரசு மேலும் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

டெல்லியில் கடந்த 15ந்தேதி நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதல் மந்திரி குமாரசாமி சென்றிருந்தார்.  அப்போது மேகதாது அணை திட்டம் மற்றும் காவிரி, மகதாயி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகள் குறித்து மத்திய மந்திரி கஜேந்திரசிங் சேகாவத்துடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

குறிப்பாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு கட்ட உள்ள புதிய அணைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் அவர் கேட்டு கொண்டார். மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய மந்திரியிடம் ஒரு மனுவையும் அவர் கொடுத்தார்.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும்.  கர்நாடக அரசின் கடிதத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.  மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுப்புற சூழல் அனுமதியை கொடுக்க முடியாது என்று மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

ஆணையம் உத்தரவிட்ட நீரை திறந்து விடாமல், புதிய அணை கட்டினால் தான் தண்ணீர் திறக்க முடியுமென ஓர் அராஜக மனப்பான்மையுடன் கர்நாடக அரசு செயல்படுவது, அரசியல் சட்டம், நீதிமன்ற தீர்ப்பை துச்சமென மதிக்கும் செயல் என்றும் அவர் சாடியுள்ளார்.

Next Story