அரசியல் காழ்ப்புணர்வோடு தி.மு.க. நடத்தும் போராட்டங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


அரசியல் காழ்ப்புணர்வோடு தி.மு.க. நடத்தும் போராட்டங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 24 Jun 2019 10:15 PM GMT (Updated: 24 Jun 2019 9:47 PM GMT)

தண்ணீர் பற்றாக்குறையை அரசு திறம்பட சமாளித்து வரும் நிலையில், அரசியல் காழ்ப்புணர்வோடு தி.மு.க. நடத்தும் போராட்டங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

கவிஞர் கண்ணதாசனின் 93-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை தியாகராயநகரில் உள்ள கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பா.பென்ஜமின், க.பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி, பி.சத்யநாராயணன் எம்.எல்.ஏ., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன்பிறகு அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

எடுபடாது

தண்ணீர் தட்டுப்பாடு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் வாரம் ஒருமுறை ஆய்வுக்கூட்டம் நடத்தி, அதன் அடிப்படையில் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூட சுமார் ரூ.500 கோடி நிதி விடுவிக்கப்பட்டு சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சென்னையில் தான் இருக்கிறார். இவர் 300 நாட்கள் சென்னையில் இருந்துவிட்டு 65 நாட்கள் தான் சொந்த ஊருக்கு செல்வார். 300 நாட்கள் சென்னையின் குடிநீரை குடித்துவிட்டு, ஜோலார்ப்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் வரக்கூடாது என்று சொல்வது சென்னை மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். இதனை சென்னை மக்கள் நன்கு உணர்வார்கள்.

வறட்சியிலும், வெள்ளத்திலும் சரி எந்த இயற்கை இடர்பாடுகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது அ.தி.மு.க. அரசு. எனவே அரசியல் காழ்ப்புணர்வோடு தி.மு.க. நடத்தும் போராட்டங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story