மாநில செய்திகள்

விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரிஎம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்போலீஸ் தடியடி + "||" + Legislators captive Students struggle

விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரிஎம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்போலீஸ் தடியடி

விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரிஎம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்போலீஸ் தடியடி
இலவச மடிக்கணினிகள் கேட்டு எம்.எல்.ஏ.க்களை மாணவ- மாணவிகள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள்.
ஈரோடு,

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்ச்சிகள் ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதி வாரியாக நடந்து வருகிறது. தற்போது பள்ளிக்கூடத்தில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு ஆங்காங்கே அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மடிக்கணினிகள் வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டு படித்த மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தன.

போராட்டம்

நேற்று ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கருங்கல் பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிக் கூடங்களில் மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கினார்கள். இந்த 3 பள்ளிக்கூடங்களிலும் முன்னாள் மாணவ-மாணவிகள் தங்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள மடிக்கணினிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதில் பலர் தற்போது கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இதற்கு எம்.எல்.ஏ.க்கள் அளித்த பதில் திருப்தியாக இல்லை என்று மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள் சிறைபிடிப்பு

போராட்டம் நடத்திய மாணவ - மாணவிகள் எம்.எல்.ஏ.க்களின் கார்களை மறித்து முற்றுகையிட்டனர். வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மடிக்கணினிகள் வழங்கும் விழா முடிந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியே வந்தபோது மாணவ- மாணவிகளில் ஒரு குழுவினர் எம்.எல்.ஏ.க்களின் வாகனங்களுக்கு முன்பு உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ.க்கள் வெளியே செல்ல முடியாமல் சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகையிட்ட மாணவ- மாணவிகளை போலீசார் அப்புறப்படுத்திய பின்னர் எம்.எல்.ஏ.க்களின் வாகனங்கள் வெளியே புறப்பட்டு சென்றன. கலையாமல் கோஷம் எழுப்பிக்கொண்டு இருந்த மாணவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

மாணவ-மாணவிகள் கைது

போராட்டம் நடத்திய மாணவ- மாணவிகள் 58 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் மாணவ-மாணவிகள் மடிக்கணினி கேட்டு நடத்திய போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.