தொடர்ந்து ஏற்றம்: தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது ஒரு பவுன் ரூ.26,424-க்கு விற்பனை


தொடர்ந்து ஏற்றம்: தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது ஒரு பவுன் ரூ.26,424-க்கு விற்பனை
x
தினத்தந்தி 25 Jun 2019 11:21 PM GMT (Updated: 25 Jun 2019 11:21 PM GMT)

தங்கம் விலை தொடர்ந்து விலை ஏறி வருவதால், வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 424-க்கு விற்பனை ஆனது.

சென்னை,

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது.

அதன் தொடர்ச்சியாக விலை அதிகரித்த வண்ணம் இருந்ததால், ஒரே வாரத்தில் ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்தை தொட்டு வரலாறு காணாத உச்சத்தை அடைந்து இருக்கிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.158-ம், பவுனுக்கு ரூ.1,264-ம் உயர்ந்து இருக்கிறது.

தங்கம் விலை உயர்வு

நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்து 265-க்கும், பவுனுக்கு ரூ.26 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.38-ம், பவுனுக்கு ரூ.304-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 303-க்கும், ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 424-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை எப்போதெல்லாம் உயருகிறதோ, அப்போது வெள்ளி விலையும் உயரும். ஆனால் நேற்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:-

முதலீடு

அமெரிக்காவின் பெடரல் கூட்டத்தில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க மறுத்துவிட்டனர். மேலும், அமெரிக்கா-சீனா இடையே நடந்து வரும் வர்த்தக போர், அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டு வரும் மோதல் போக்கு ஆகிய காரணங்களால் அமெரிக்காவின் டாலர் வீழ்ச்சி அடையும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் அமெரிக்க டாலர் வைத்திருப்பவர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் காரணமாக தங்கம் விலை உயருகிறது. இந்த தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் இருக்கிறது. இன்னும் வரக்கூடிய நாட்களிலும் தங்கம் விலை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story