சபாநாயகருக்கு எதிரான தீர்மானம்; தி.மு.க. பதுங்குவது பாயத்தான்: மு.க. ஸ்டாலின்


சபாநாயகருக்கு எதிரான தீர்மானம்; தி.மு.க. பதுங்குவது பாயத்தான்:  மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 30 Jun 2019 6:31 AM GMT (Updated: 30 Jun 2019 6:44 AM GMT)

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் பற்றிய விவகாரத்தில் தி.மு.க. பதுங்குவது பாயத்தான் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 28ந்தேதி தொடங்கியது.  கூட்டத்தொடரின் முதல் நாளில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  இதையடுத்து, வரும் திங்கட்கிழமை அவை மீண்டும் கூடும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இதனால் சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், ஜூலை 1 ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த போவதில்லை என்று தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள தேவையில்லை என்று சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுத்துள்ளோம்.  அன்றைய சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தோம். இப்போதைக்கு அதை வலியுறுத்த போவதில்லை என்றார்.

இந்நிலையில், விக்ரவாண்டியில் மு.க. ஸ்டாலின் இன்று கூறும்பொழுது, தமிழகத்தில் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க நினைத்தார்கள்.  அதை தி.மு.க. தடுத்தி நிறுத்தியுள்ளது.  சுப்ரீம் கோர்ட்டு புரிந்து கொண்டு பதவி பறிப்புக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் ஆட்சி தொடர்கிறதே என்ற கேள்வி உள்ளது.  சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துவிட்டு, தி.மு.க. பதுங்குவதாக சிலர் கூறுகின்றனர்.  புலி பதுங்குவது பாய்வதற்குதான்.  பாய வேண்டிய நேரத்தில் பாயும் என்று கூறியுள்ளார்.

Next Story