பவானிசாகர் வனப்பகுதியில் புலி, செந்நாய்கள் அதிகரிப்பு மலைவாழ் மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை


பவானிசாகர் வனப்பகுதியில் புலி, செந்நாய்கள் அதிகரிப்பு மலைவாழ் மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 July 2019 3:56 AM IST (Updated: 1 July 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் வனப்பகுதியில் புலி மற்றும் செந்நாய்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதிக்குள் மலைவாழ் மக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பவானிசாகர்,

தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், ஆனைமலை, முதுமலை மற்றும் களக்காடு முண்டந்துறை என 4 புலிகள் காப்பகம் உள்ளது. இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய காப்பகமாக இருக்கிறது. 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் அடர்ந்த வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த காப்பகம் விளங்குகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, புள்ளிமான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் மாயாற்று படுகை மற்றும் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதி ஆகியவை உள்ளது. இதனால் வனவிலங்குகள் இங்கு வந்து தண்ணீர் குடித்து தங்களுடைய தாகத்தை தீர்த்துக்கொள்கின்றன.

இந்த நிலையில் பவானி சாகர் வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குறிப்பாக மாயாற்றின் கரையோர வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி செந்நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. செந்நாய்கள் பவானிசாகரில் இருந்து தெங்குமரஹடா செல்லும் வனச் சாலையையொட்டி உள்ள பகுதிகளில் சுற்றி வருகின்றன.

பவானிசாகர் வனப்பகுதியில் புலிகள் மற்றும் செந்நாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

Next Story