மத்திய பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


மத்திய பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 July 2019 4:09 AM IST (Updated: 2 July 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பட்ஜெட் வருகிற 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வருமானவரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, வருகிற 5-ந் தேதி திருத்தப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. நடப்பாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த அப்போதைய பொறுப்பு நிதி மந்திரி பியுஷ் கோயல், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு மட்டும் வருமானவரி விலக்கு அளித்தார். ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் கூடுதலாக வருமானம் ஈட்டுவோருக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. வருமானவரி விகிதமும் மாற்றி அமைக்கப்படவில்லை.

எனவே, வருமானவரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்பது நியாயமான வாதம் ஆகும். ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீதம் என்ற அளவுக்கு பணவீக்கம் அதிகரிக்கும் நிலையில், அதற்கேற்றவாறு மாத ஊதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு வருமானவரி விலக்கு உச்சவரம்பும் ஆண்டு தோறும் தானாக உயர வகை செய்யப்பட வேண்டும். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருவாய் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

அதற்கேற்ற வகையில் வருமானவரி விலக்கு உயர்த்தப்படாவிட்டால், மாத ஊதியதாரர்கள் தங்களின் ஊதியத்தில் பெரும்பகுதியை வருமானவரிக்காகவே செலுத்த வேண்டியிருக்கும். எனவே, வருமான வரி விலக்கு வரம்பு குறைந்தது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். அதன்பின் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கான வரியை இப்போதுள்ள 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் அல்லது 5 சதவீதமாக குறைக்க அரசு முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக உழவுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு முற்றிலுமாக குறைந்து விட்டது. எனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 150 ஆக அரசு உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story