தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அல்ல, பற்றாக்குறை : சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்
தமிழகத்தில் ஏற்பட்டு இருப்பது தண்ணீர் பஞ்சம் அல்ல, பற்றாக்குறை என்று சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார்.
சென்னை,
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்) ஆகியோர் குடிநீர் பிரச்சினை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். தற்போது ஏற்பட்டு இருப்பது தண்ணீர் பஞ்சம் அல்ல, பற்றாக்குறை. இதை வைத்து அரசியல் செய்ய கூடாது. எல்லோரும் இணைந்து தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மழைநீரை சேமிக்க மழைநீர் சேமிப்பு திட்டத்தை ஜெயலலிதா அமல்படுத்தினார்.
கடந்த 2016 முதல் 2019 வரையிலான 3 ஆண்டு காலத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில், 2,475 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில், 4,091 குடிநீர்ப்பணிகளும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், 5,890 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பில், 7,249 குடிநீர்ப் பணிகளும், பேரூராட்சிகளில், 196 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பில், 3,924 குடிநீர்ப் பணிகளும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 3,593 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில், 49 குடிநீர் திட்டப் பணிகளும், ஊரகப் பகுதிகளில், 1,928 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பில், 1 லட்சத்து 8 ஆயிரத்து 171 குடிநீர்ப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அம்ரூத் திட்டத்தின் கீழ், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 பெரிய குடிநீர்த் திட்டப் பணிகள் ரூ.6,496 கோடியில் நடைபெற்று வருகின்றன.
மழையின் அளவு 68 விழுக்காடு குறைவாக உள்ளது. இவ்வாறு மோசமான சூழ்நிலையிலும் சென்னை மாநகருக்கு தற்போது வரை 525 மில்லியன் லிட்டர் குடிநீர் நாள் ஒன்றுக்கு வழங்கி வருகின்றோம். அதேபோல், தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறம் மற்றும் ஊரகப்பகுதிகளில் 7,508 மில்லியன் லிட்டர் குடிநீர் நாள்தோறும் வழங்கி வருகின்றோம். இந்த அரசு பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாகத் தான் தமிழ்நாடு முழுவதும் தேவையான குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
சென்னை மாநகரின் குடிநீரின் பற்றாக்குறையை சமாளிக்க, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை ரெயில் மூலமாக சென்னைக்கு கொண்டு வருவதற்கு 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 250 விவசாய கிணறுகளிலிருந்து நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் வரை குடிநீர் பெறப்பட்டு சென்னை மாநகருக்கு வழங்கப்பட்டது. தற்போது, வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணையிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு, வீராணம் ஏரியின் முழுக் கொள்ளளவு 1465 மில்லியன் கன அடியாக 15.04.2019-ல் நிரப்பப்பட்டு, வீராணம் ஏரியிலிருந்து மட்டும் தற்பொழுது நாளொன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மாநகருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகரின் கோடைக்கால குடிநீர் தேவையை சமாளிக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 233 கோடியே 72 லட்சம் ரூபாயினை ஒதுக்கீடு செய்து, வறட்சி நிவாரணப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகருக்கு, நாளொன் றுக்கு 10 மில்லியன் லிட்டர் குடிநீர் கூடுதலாக கிடைக்கும் வகையில், நெய்வேலி நீர்ப்படுகையில் 9 புதிய ஆழ்துளை கிணறுகள் நிறுவும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
அதேபோல, நெய்வேலி சுரங்கம், பரவனாறு ஆற்றில் இருந்து நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறுவதற்கு 6 கோடியே 67 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், நெய்வேலி பகுதியில் ஏற்கனவே உள்ள 22 ஆழ்துளை கிணறுகளிலிருந்து 20 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, வீராணம் திட்ட குழாய் வழியாக சென்னை மாநகருக்கு வழங்கப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் வகையில், சிக்கராயபுரம் கல்குவாரியில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் முதல் சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று, புதிய முயற்சியாக எருமையூர் கல்குவாரியிலிருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் நீர் எடுக்க 19 கோடியே 17 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டு, சென்னை மாநகருக்கு ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் குடிநீர் வினியோகிக்கப்படும். இரட்டைஏரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரிகளிலிருந்து 30 மில்லியன் லிட்டர் நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்க ரூ.53 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தற்போது இரட்டை ஏரியில் பணிகள் முடிக்கப்பட்டு, நீர் பெறுவதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள புலியம்பாக்கம், நல்லம்பாக்கம் மற்றும் கீரம்பாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள கல்குவாரிகளில் தேங்கியுள்ள நீரை சுத்திகரித்து 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநகருக்கு நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, தலக்கணஞ்சேரி ஏரியிலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 5 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுப்பதற்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகருக்கு ஜூலை 1-ந்தேதி முதல் நவம்பர் 2019 வரை, மழை பொழிவு இல்லாவிடினும் தொடர்ந்து நாள்தோறும் தற்போது வழங்கப்படும் 525 மில்லியன் லிட்டர் குடிநீர் தொடர்ந்து வழங்கப்படும். நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு 27.06.2019 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இங்கு பணிகள் விரைவில் துவக்கப்படவுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story