ரேஷன் கடைகளில் வைக்கோல் விற்க நடவடிக்கை எடுக்கப்படுமா? தி.மு.க. எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் பதில்
தமிழக சட்டசபையில் நேற்று நடந்த குறிப்பிடத்தகுந்த, சுவாரசியமான நிகழ்வுகள் பற்றிய ஒரு தொகுப்பு இது:
சென்னை,
சட்டசபை நேற்று காலை கூடியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை தொடர்பான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தபோது, 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறித்து குறிப்பிட்டார். “அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக 9 நவரத்தினங்களை மக்கள் வாக்களித்து, வெற்றி பெற செய்து அனுப்பி வைத்து இருக்கிறார்கள். இந்த வெற்றிக்காக உழைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி” என்று குறிப்பிட்டார்.
தி.மு.க. எம்.எல்.ஏ. ரங்கநாதன் பேசும்போது, நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி தேடித்தந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி செலுத்துவதாக தெரிவித்தார்.
சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதி நேற்று பேசும்போது தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் உணவு பொருட்களை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் அரசு வழங்கிய ஆடு, மாடுகள் தீவனம் இன்றி சாவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “ரேஷன் கடைகளில் வைக்கோல், புல்லையெல்லாம் வைத்து விற்க முடியாது. பசு தீவனம் இலவசமாகவும், மானியமாகவும் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், “ஜெயலலிதா வழங்கிய ஆடு, மாடுகளால் ஏழைகளின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. அந்த மாடுகள் மூலம் தற்போது ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 426 கன்றுகுட்டிகள் இருக்கின்றன. இதன் மதிப்பு ரூ.75 கோடி. அதேபோல் ஆடுகள் மூலம் 67 லட்சம் குட்டிகள் பெறப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.1,676 கோடியாகும். ஏழைகளுக்கு வழங்கப்பட்ட எந்த ஆடும், மாடும் சாகவில்லை. உறுப்பினர் தவறான தகவலை சபைக்கு தர வேண்டாம்” என்றார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், “காஞ்சீபுரத்தில் ஆதி அத்திவரதர் தண்ணீருக்கு அடியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 1979-ம் ஆண்டு முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். ஆட்சி நடத்தியபோது அத்திவரதர் தண்ணீருக்கு அடியிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து ஆசி வழங்கினார். தற்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஆதி அத்திவரதர் தண்ணீருக்கு அடியிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். உறுப்பினர்கள் அத்திவரதரின் ஆசியை பெற வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.
சபாநாயகர் ப.தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக தி.மு.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு இருந்தது.பின்னர் இந்த கடிதத்தை தி.மு.க. திரும்பப் பெற்றது.
இதையடுத்து சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்படுவதாக சட்டசபையில் சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
Related Tags :
Next Story