ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் மாநில சுயாட்சி பாதிக்கப்படாது: தமிழிசை சவுந்தரராஜன்
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் மாநில சுயாட்சி பாதிக்கப்படாது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை குறித்து அ.தி.மு.க. அரசு பரிசீலனை செய்து முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.
சென்னை தியாகராய நகரில் நடந்த பா.ஜ.க. மாநில மைய குழு கூட்டத்திற்கு பின் இதுபற்றி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் மாநில சுயாட்சி பாதிக்கப்படாது என்று கூறினார். ஒரே நாடு ஒரே குடும்பம் என நாட்டை ஆட்சி செய்தவர்களை தி.மு.க. ஏன் எதிர்க்கவில்லை? என்று கேள்வியும் எழுப்பினார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், சென்னை மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதே நகரத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் ஏற்பட்டது. தற்போது தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கு மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், வித்தியாசமான அதிகாரத்துவம் ஆகியவையே காரணம். மக்கள் அதிக சுயநலமும், கோழைத்தனமான எண்ணமும் கொண்டுள்ளனர். புதுச்சேரியை பாதுகாக்க நாம் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். இல்லையென்றால் சென்னை போன்ற நிலைமை புதுச்சேரிக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி கூறிய தமிழிசை, தமிழக மக்கள் குறித்து கிரண்பேடி தெரிவித்த கருத்து உள்நோக்கம் கொண்டது அல்ல என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story