‘பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடும் திட்டம் இல்லை’ தமிழக தலைமை பொதுமேலாளர் விளக்கம்


‘பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடும் திட்டம் இல்லை’ தமிழக தலைமை பொதுமேலாளர் விளக்கம்
x
தினத்தந்தி 3 July 2019 4:41 AM IST (Updated: 3 July 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்படவிருப்பதாக வந்த செய்திகள் முற்றிலும் தவறானதாகும். அதுபோன்ற எந்த ஒரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று தமிழக தலைமை பொதுமேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, 

தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்ட தலைமை பொதுமேலாளர் வி.ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்படவிருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவையாகும். இதுகுறித்து, பொதுமக்களிடம் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கும் வகையில், இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடுவதற்கான எந்த ஒரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. கடும்போட்டியின் விளைவாக ஏற்பட்ட கட்டண சரிவின் காரணமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் சில மாதங்களாக நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நெருக்கடியில் இருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மீட்டு எடுப்பதற்கான ஒரு திட்டத்தை மத்திய அரசு தயாரித்து மந்திரிசபையின் ஒப்புதலுக்கு அளித்துள்ளது.

தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில், தொலைத்தொடர்பு சேவைகளை அளிப்பதோடு மட்டுமின்றி, ராணுவத்திற்கான தொலைத்தொடர்பு சேவைகளையும் பி.எஸ்.என்.எல். அளித்து வருகிறது. நம் நாட்டிற்கு அத்தியாவசியமான தொலைத்தொடர்பு நிறுவனமாக பி.எஸ்.என்.எல். திகழ்கிறது என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின்போது, பொதுமக்களுக்கு தொடர்ந்து தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் ஒரே நிறுவனமாக பி.எஸ்.என்.எல். திகழ்கிறது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் பொதுமக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றும் எனவும், மிகச்சிறந்த தொலைத்தொடர்பு சேவைகளை வெளிப்படையான மற்றும் மிகக்குறைவான கட்டணங்களில், தொடர்ந்து அளிக்கும். எனவே, பி.எஸ்.என்.எல். தொடர்பான எந்த வதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story