ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்: சாதக, பாதகங்களை அரசு ஆய்வு செய்யும் - சட்டசபையில் அமைச்சர் தகவல்
‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை ஆய்வு செய்து ஏற்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்யும் என்று சட்டசபையில் அமைச்சர் காமராஜ் கூறினார்.
சென்னை,
சட்டசபையில் நேற்று தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு (திருவண்ணாமலை தொகுதி) சிறப்பு கவன ஈர்ப்பு ஒன்றை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ என்ற பெயரில் மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டையை அறிமுகம் செய்ய உள்ளது. மாநிலங்கள் தோறும் தற்போது வழங்கப்பட்டு வரும் உணவு வினியோகத்தில் மாறுபாடுகள் இருக்கிறது. தமிழகத்தில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதுடன் பணச்சுமையும் ஏற்படும். மாநில சுயாட்சிக்கு வேட்டு வைத்துவிடுமோ? என்ற ஐயம் எழுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு பதில் அளித்து உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-
ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந்தேதி மத்திய அரசிடம் இருந்து சுற்றறிக்கை வந்தது. தமிழகத்தில் ஒரு கோடியே 99 லட்சத்து 53 ஆயிரத்து 801 குடும்ப அட்டைகள் உள்ளன. எனவே, இந்த புதிய திட்டத்தால் ஏற்படும் சாதக, பாதகங்கள் ஆய்வு செய்யப்படும்.
தற்போது செயல்பாட்டில் உள்ள பொது வினியோக திட்டத்தை எந்த அளவிலும் பாதிக்காது என்ற அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story