தீர்ப்புகள் வெளிவரும் மொழிப்பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்க்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்


தீர்ப்புகள் வெளிவரும் மொழிப்பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்க்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 3 July 2019 12:09 PM IST (Updated: 3 July 2019 12:09 PM IST)
t-max-icont-min-icon

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளிவரும் மொழிப்பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்க்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சென்னை,

உலக நாடுகள் முழுவதும் சுப்ரீம்கோர்ட் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அல்லது அந்த நாட்டின் மொழியில் வெளியிடப்படும். இந்தியா பல மொழிகளைக் கொண்டுள்ள நாடாக இருந்துவரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுவருகின்றன.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் அதன் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. தற்போது வழக்கு முடிந்து ஆங்கிலத்தில் தீர்ப்பு பதிவேற்றப்படும் அதே நேரத்தில் ஆங்கிலம் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளிலும் தீர்ப்பை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மொழிகளிலும் தீர்ப்புகள் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, சுப்ரீம் கோர்ட்டின் மின்னணு  மென்பொருள் அணியால் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளின் உதவியுடன் தீர்ப்புகளை மொழியாக்கம் செய்து இணையத்தில் பதிவேற்றுவதற்கு சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒப்புதல் அளித்துள்ளார். ஒரு வாரம் முதல் 10 நாள்களுக்குள் தீர்ப்புகள் ஆறு மொழிகளில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.

சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கும்போது, அதிகமான மேல்முறையீடு வழக்குகள் வரும் மொழிகளை மட்டும் தற்போது தேர்ந்தெடுத்துள்ளோம். மற்ற மொழிகளையும் சேர்க்க விரைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கக் கோரி மக்களவையில் ரவிக்குமார் எம்.பி. நோட்டீஸ் கொடுத்து உள்ளார்.

இது குறித்து  தி.மு.க தலைவர்  மு.க ஸ்டாலின் கூறியதாவது;-

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழியாக்கம் என்பதை திமுக வரவேற்கிறது. செம்மொழியாம் தமிழ்மொழி உச்சநீதிமன்ற பட்டியலில் இல்லாதது வருத்தமளிக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளிவரும் மொழிப்பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு திமுக சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன் என கூறினார்.

Next Story