குடிநீர் பிரச்சினையை அரசியல் ஆக்காமல் ஆலோசனை வழங்குங்கள் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
குடிநீர் பிரச்சினையை அரசியல் ஆக்காமல் போராட்டத்தை தவிர்த்து ஆளும் கட்சிக்கு ஆலோசனை வழங்கினால் நன்றாக இருக்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
சென்னை
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய மயிலாடுதுறை அதிமுக எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், தங்கள் தொகுதியில் ஊரக சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரக பகுதிகளில் சாலை அமைப்பதற்கு அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதாக தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், ஒரு லட்சத்து 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு இருந்த ஊரக சாலை தற்போது ஒரு லட்சத்து 49 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்திருப்பதாக கூறினார்.
அதேபோல பேரூராட்சிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 315 கோடி ரூபாயில் ஆயிரத்து 983 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் மத்திய அரசின் நபார்டு திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே சாலை அமைப்பதற்கு அதிக நிதி பெற்று அதனை செயல்படுத்தும் மாநிலம் தமிழகம் என்று வேலுமணி குறிப்பிட்டார்.
மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய தி.மு.க. உறுப்பினர் செங்கூட்டுவன், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் போராட்டங்கள் நடப்பதாகத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் வேலுமணி, மழை பொய்த்ததாலேயே குடிநீர் பிரச்சினை நிலவுவதாகவும், அதனை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது மக்கள் புதிய குடங்களுடன் போராடுவதை பார்க்க முடிவதாகத் தெரிவித்த அவர், குடிநீர் பிரச்சினையை அரசியல் ஆக்காமல் போராட்டத்தை தவிர்த்து ஆளும் கட்சிக்கு ஆலோசனை வழங்கினால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
Related Tags :
Next Story