அணை, ஏரிகளில் இருந்து அள்ளப்படும் வண்டல் மண்ணை இலவசமாக வழங்க வேண்டும் : முதல்-அமைச்சர் உத்தரவு
தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளில் இருந்து அள்ளப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழக பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் நீர் ஆதாரங்கள் என 2 பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் கட்டிடப்பிரிவு தமிழக அரசுக்கு சொந்தமான கட்டிடங்களை பராமரிக்கவும், புதிய கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் நீர் ஆதாரத்துறை தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகளை பராமரிப்பது மற்றும் புதிதாக அணைகள் மற்றும் ஏரிகள் அமைக்கும் பணிகளில் ஈடுபடுகிறது. அந்தவகையில் பொதுப்பணித்துறையின் நீர் ஆதாரத்துறை 89 அணைகள், 14 ஆயிரத்து 98 ஏரிகளை பராமரித்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால் அவை 30 சதவீத கொள்ளளவை இழந்து உள்ளன. வரும் பருவ மழைக்கு முன்பாக அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரும் பணியில் பொதுப்பணித்துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது தூர்வாரப்படும் நீர்நிலைகளில் எவ்வளவு வண்டல் மண் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் முக்கிய அணைகளான மேட்டூர், வைகை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் அமராவதி ஆகிய 5 அணைகளில் வண்டல் மண் படிமங்களை முதல் கட்டமாக அகற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தற்போது தண்ணீர் வற்றி உள்ளது. இந்த ஏரிகளையும் தூர்வாரி ஆழப்படுத்துவதுடன் வண்டல் மண்ணும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த 4 ஏரிகளில் இருந்து 38 லட்சம் மில்லியன் கன மீட்டர் வரை மண் அள்ளப்படுகிறது. இதில் ஒரு யூனிட் வண்டல் மண்ணை ரூ.300-க்கு விற்பனை செய்ய பொதுப்பணித்துறை திட்டமிட்டு இருந்தது. இதற்காக மத்திய அரசு நிறுவனமான ‘வாப்காஸ்’ மூலம் அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டது.
இதனை பரிசீலித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் இலவசமாக வழங்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து முதல் கட்டமாக 5 அணைகள் மற்றும் 4 ஏரிகளில் இருந்து வண்டல் மண் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அணைகள், தடுப்பணைகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்களை முறையாக பராமரித்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. குடிமாரமத்து திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு 29 மாவட்டங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 1,511 பணிகளில் 1,311 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. நடப்பாண்டு 31 மாவட்டங்களில் 1,829 பணிகள் நடந்து வருகிறது.
ஏரிகள், அணைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீரை அதிகரிப்பதற்காக ஆறுகள், ஓடைகளின் குறுக்கே 3 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்பணைகள் கட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இது தவிர 18 மாவட்டங்களில் 906 ஏரிகள் மற்றும் 183 அணைகட்டுகளின் புனரமைப்பு பணிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னையின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதற்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகையில் அமைக்கப்படும் புதிய நீர்தேக்க பணி தற்போது 95 சதவீதம் முடிவடைந்து உள்ளது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்து வடகிழக்கு பருவ மழை மூலம் தண்ணீர் நிரப்ப திட்டமிட்டு உள்ளது.
பெண்ணையாறு (சாத்தனூர்அணை)- செய்யாறுடனும், பெண்ணையாறு (நெடுங்கல் அணைக்கட்டு)- பாலாறு உடனும், காவிரி (மேட்டூர் அணை)- சரபங்கா- திருமணிமுத்தாறு- அய்யாறு ஆகிய நதிகளும், காவிரி-அக்னியாறு- தெற்கு வெள்ளாறு- மணிமுத்தாறு- வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், தாமிரபரணி- கருமேனியாறு-நம்பியாறு போன்ற நதிகள் இணைக்கப்பட உள்ளன.
இதேபோன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நீர் நிலைகளும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பருவ மழையில் தண்ணீர் சேமிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story