கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு : முதல் 3 இடங்களை மாணவிகளே பிடித்தனர்


கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு : முதல் 3 இடங்களை மாணவிகளே பிடித்தனர்
x
தினத்தந்தி 4 July 2019 4:57 AM IST (Updated: 4 July 2019 4:57 AM IST)
t-max-icont-min-icon

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதல் 3 இடங்களை மாணவிகளே பிடித்துள்ளனர்.

சென்னை, 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்.சி. அன்ட் ஏ.எச்.) மற்றும் பி.டெக் (உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழி இன தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்பு) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ‘ஆன்-லைன்’ மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகளுக்காக 14 ஆயிரத்து 695 பேரின் விண்ணப்பங்களும் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2 ஆயிரத்து 427 பேரின் விண்ணப்பங்களும் என மொத்தம் 17 ஆயிரத்து 122 பேரின் விண்ணப்பங்கள் தகுதி பெற்றன.

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு, சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பங்கேற்று தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இதில் அரசு முதன்மை செயலாளர் கே.கோபால், கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் சி.பாலசந்திரன், பதிவாளர் டென்சிங் ஞானராஜ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை மாணவிகளே பிடித்தனர். தர்மபுரி மாணவி எஸ்.சுவாதி (199.5 மதிப்பெண்), தூத்துக்குடி மாணவி எ.ஜேன் சில்வியா (199.25), கன்னியாகுமரி மாணவி எம்.ஹர்சா (199) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

பி.டெக். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் சிவகங்கை மாணவி ஜி.லட்சுமி பிரியதர்ஷினி (197.25), திருச்சி மாணவி ஆர்.ஐஸ்வர்யா (196.5), தர்மபுரி மாணவர் கே.எம்.சுரேஷ் (195.25) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கால்நடை படிப்புகளுக்கான தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக இணையதளங்களில் பார்த்து கொள்ளலாம். கலந்தாய்வு இம்மாதம் 3-வது வாரத்தில் நடைபெறும். கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம், இடம் போன்ற விவரங்கள் இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். அத்துடன் கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் விவரம், மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.

கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதத்தை அவர்களது நுழைவு அடையாள எண் (லாகின் ஐ.டி.) மற்றும் கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கடந்த முறையை காட்டிலும் இந்தாண்டு கால்நடை பட்டப்படிப்புகளுக்காக 29.3 சதவீதமும், பி.டெக். படிப்புகளுக்காக 14.64 சதவீதமும் கூடுதலாக விண்ணப்பங்கள் இம்முறை வந்திருக்கின்றன.

எனவே கூடுதல் கல்லூரிகள் தொடங்கப்படுவது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசியிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story