திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று அறிவிக்கப்படலாம்?
திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றியது.
திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் தீவிரமாக பிரசாரம் செய்தார். தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதியிலும் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், அதிமுக அரசையும், மத்தியில் உள்ள பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்தார்.
உதயநிதி ஸ்டாலினின் உழைப்பை பார்த்து வியந்த திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வந்தார்கள்.
முன்னாள் மத்திய மந்திரியும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்றவருமான டி.ஆர்.பாலு இதை முதன்முதலாக வலியுறுத்தினார். அவரது கருத்தை தி.மு.க.வில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஆதரித்துள்ளனர். எனினும் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்குவது குறித்து மு.க.ஸ்டாலின் எந்த பதிலும் கூறவில்லை. தி.மு.க.வின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்று தலைமைக்கு கடிதங்கள் அனுப்பினார்கள்.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி என்பது மு.க.ஸ்டாலின் நீண்ட காலமாக வகித்து வந்த பதவி ஆகும். 2012-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் இளைஞரணியில் சீரமைப்பைக் கொண்டு வந்தார்.
2017-ம் ஆண்டு இளைஞரணி செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வழங்கினார். அதனை அவர் ராஜினாமா செய்து விட்டார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் உதயநிதிக்கு திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு கொடுக்க சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story