ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அடுத்த முறை கண்டிப்பாக ஆஜராவேன் -பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி நிச்சயம் விளக்கம் அளிப்பேன் என்று துணை-முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தெரிவித்துள்ளார்.
சென்னை
சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆறுமுகசாமி ஆணையம் பலமுறை சம்மன் அனுப்பியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் இருப்பதை சுட்டிக்காட்டி பேசினார். அதேபோல ஜெயலலிதா மரணம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வைத்த கருத்துகளையும் துணை-முதலமைச்சர் ஆணையத்தில் தெரிவிப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து துணை-முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது:-
ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை 4 முறை தனக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அதில் இரண்டு முறை தனக்கு வேலை இருந்த காரணத்தால் ஆஜராக விலக்கு கேட்டதாகவும், இரண்டு முறை ஆணையமே ஒத்தி வைத்ததாகவும் துணை-முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தான் ஒருமுறை கூட அவரைப் பார்க்கவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரிடம் ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டதையும் குறிப்பிட்டார்.
ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை நீங்கி, ஆணையம் தனக்கு சம்மன் அனுப்பினால் நேரில் ஆஜராகி நிச்சயம் விளக்கம் அளிப்பேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்தார்.
Related Tags :
Next Story