காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவக்கொலை பெண்ணின் தந்தை கைது
விளாத்திகுளம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்டனர்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
காதல்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் திருமேனி. இவருடைய மகன் சோலைராஜ் (வயது 23). பக்கத்து ஊரான பல்லாகுளத்தைச் சேர்ந்தவர் அழகர் மகள் பேச்சியம்மாள் என்ற ஜோதி (20). இவர் பிளஸ்-2 படித்து உள்ளார். இவர்கள் 2 பேரும் குளத்தூர்-கீழவைப்பார் ரோட்டில் உள்ள உப்பளத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.
அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு ஜோதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்ப்பம்
இந்த நிலையில் பெற்றோர்களுக்கு தெரியாமல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சோலைராஜூம், ஜோதியும் குளத்தூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, குளத்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது சோலைராஜ், ஜோதி ஆகிய இருவரின் குடும்பத்தினரையும் போலீசார் வரவழைத்து, புதுமண தம்பதிக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தி, அவர்களிடம் எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.
திருமணத்துக்கு பின்னர் சோலைராஜ் தனது வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கர்ப்பம் அடைந்த ஜோதி, மருத்துவ பரிசோதனைக்காக குளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார்.
படுகொலை
காற்றோட்டத்துக்காக சோலைராஜூம், ஜோதியும் இரவில் தங்களது வீட்டின் வளாகத்தில் தரையில் பாய் விரித்து படுத்து தூங்கி வந்தனர். அவர்களது வீட்டைச் சுற்றிலும் இரும்பு தகடாலான வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் கணவன்-மனைவி 2 பேரும் வீட்டின் வளாகத்தில் தரையில் பாய் விரித்து படுத்து தூங்கினர்.
அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், சோலைராஜின் வீட்டின் இரும்பு தகடாலான வேலியை தாண்டி குதித்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள், வீட்டின் வளாகத்தில் தூங்கிக்கொண்டிருந்த சோலைராஜ், ஜோதி ஆகிய 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சோலைராஜ், ஜோதி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் விசாரணை
நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் சோலைராஜ், ஜோதி ஆகிய 2 பேரும் தங்களது வீட்டில் இருந்து வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது 2 பேரும் வீட்டின் வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து குளத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை கொலை செய்த கொலையாளிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
பெண்ணின் தந்தை கைது
இந்த நிலையில் கொலை தொடர்பாக ஜோதியின் தந்தை அழகரை போலீசார் திடீரென்று கைது செய்துள்ளனர். அழகர், வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மகளின் காதல் விவகாரம் தெரியவந்ததும், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அழகர் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் தன்னுடைய மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டார். ஆனால் அதற்குள்ளாக ஜோதி, சோலைராஜை திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சோலைராஜ், ஜோதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை சம்பவம் நடந்த உடன் அழகர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இதனால் அவர் மேல் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீசார் தேடி வந்தனர். கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூரில் போலீசார் நேற்று மாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த அழகரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆணவக்கொலை
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அழகர் தன்னுடைய மகள் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்ததால், அவர்கள் 2 பேரையும் ஆணவக்கொலை செய்தது தெரியவந்தது. கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story