தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை - சென்னை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை - சென்னை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 July 2019 5:00 AM IST (Updated: 6 July 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

சென்னை, 

சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ‘நான் குற்றம்சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியபோது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக அவர் மீது ஆயிரம் விளக்கு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி எழும்பூர் கோர்ட்டில் வைகோ சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், 52 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்பு மே 25-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. வைகோ மீது போலீசார் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கு முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இந்த கோர்ட்டில் வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அரசு தரப்பில் இன்ஸ்பெக்டர் மோகன் உள்பட 9 பேர் சாட்சியம் அளித்தனர். இவர்களிடம் வைகோ தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார்.

அரசு தரப்பு சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் அடிப்படையில், வைகோவிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதி கேட்டார். அப்போது, ‘விடு தலைப்புலிகளை ஆதரித்து பேசினேன்’ என்று பதில் அளித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்து இருந்தார்.

அதன்படி நேற்று காலை 10.15 மணிக்கு வைகோ கோர்ட்டில் ஆஜரானார். அவருடன் ம.தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த வக்கீல் தேவதாஸ், வக்கீல்கள் நன்மாறன், வெற்றிவேல், செந்தில் செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். இதனால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக இருந்தது.

காலை 10.30 மணிக்கு கோர்ட்டுக்கு வந்த நீதிபதி ஜெ.சாந்தி, இந்த வழக்கில் நீங்கள் (வைகோவை பார்த்து) குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கிறேன். தண்டனை குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகின்றீர்களா? என்று கேட்டார்.

அதற்கு வைகோ, ‘தண்டனையை இன்றே அறிவித்து விட்டால் நல்லது’ என்றார்.

பின்னர் நீதிபதி, ‘தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த வழக்கில் வைகோ ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை தவிர்த்து மீதமுள்ள காலத்தை தண்டனையாக அனுபவிக்க வேண்டும்’ என்று தீர்ப்பு கூறினார்.

இதைத்தொடர்ந்து வைகோ தரப்பு வக்கீல்கள் தீர்ப்பு நகலை வாங்கி படித்து பார்த்தனர். அதில் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதைப் பார்த்ததும் வைகோ நீதிபதியை பார்த்து, ‘குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நான் ஒரு போதும் கேட்கவில்லை. நான் சொல்லாத வார்த்தையை தீர்ப்பில் குறிப்பிட்டு இருப்பது ஏற்புடையது அல்ல. எவ்வளவு தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள், ஏற்றுக்கொள்கிறேன். ஆயுள்தண்டனை என்றாலும் ஏற்றுக்கொள்கிறேன்’ என்றார்.

ஆனால் நீதிபதி, அதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதன்பின்பு, வைகோ தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இல்லை

தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. தரப்பில் இருந்து ம.தி.மு.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவார் என்று ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குற்ற வழக்கில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், தேசத்துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் வைகோ, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

இதனால் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பை பொறுத்தே, மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வைகோவும் முடிவு செய்திருந்தார். எனவே இந்த வழக்கின் தீர்ப்பை அறிந்து கொள்ள ம.தி.மு.க.வினர் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆர்வமாக இருந்தனர்.

ஆனால் இந்த வழக்கில் வைகோவுக்கு ஒரு ஆண்டு மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை. இதை அறிந்த ம.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

Next Story