அனைத்துத்துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த ‘பட்ஜெட்’ : முதல்-அமைச்சர் வரவேற்பு


அனைத்துத்துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த ‘பட்ஜெட்’ : முதல்-அமைச்சர் வரவேற்பு
x
தினத்தந்தி 6 July 2019 12:00 AM GMT (Updated: 5 July 2019 9:43 PM GMT)

அனைத்துத்துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த ‘பட்ஜெட்’ என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று உள்ளார்.

சென்னை, 

மத்திய பட்ஜெட் குறித்து தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான புதிய கொள்கைகளோடும், சீரிய பல திட் டங்களோடும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனால் சமர்பிக்கப் பட்டுள்ள மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை வரவேற்கிறேன்.

‘பாரத் மாலா’ திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் மூலமாக மாநில அரசுகளின் சாலைக் கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான அறிவிப்பு, தமிழ்நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவிலேயே மிக அதிக சாலைகள் அடர்த்தி கொண்ட மாநிலமாக விளங்குகின்ற தமிழ்நாட்டிற்கு, இத்திட்டத்தின் கீழ் போதிய நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

புதிய மெட்ரோ ரெயில் திட்டங்களை ஊக்குவிக்கவும், புறநகர் பகுதிகளில் ரெயில்வே பயண வசதியை மேம்படுத்தவும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி அறிவித்துள்ளார். இதன் கீழ், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளுக்கான ஒப்புதலை விரைவுபடுத்துமாறும், கோவை மற்றும் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் புதிய மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறும், சென்னை புறநகர் ரெயில்வே சேவைகளை மேலும் மேம்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

மின்சக்தித் துறையில் அதிக அளவில் மின் நுகர்வு செய்வோருக்கான மின் வழங்கல் மற்றும் மின் உற்பத்தியாளர்கள் திறந்த வெளி விற்பனை முறையில் விற்கக்கூடிய மின்சாரத்தின் மேல் விதிக்கப்படும் வரிகளை மாற்றியமைப்பதற்கான அறிவிப்பை பொறுத்தவரையிலும், பல்வேறு மானியங்களை பொறுத்தவரையிலும், மாநில அரசுகளின் வரம்புகளுக்குள் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, அனைத்து மாநில அரசுகளையும் கலந்து ஆலோசித்து ஒப்புதல் பெற்று, கருத்து ஒற்றுமையை உருவாக்கிய பின்னர் இதனை செயல்படுத்த வேண்டும்.

2024-ம் ஆண்டிற்குள், கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு அளிப்பதற்கான உயிர் நீர் இயக்கம், நிலத்தடி நீர் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு குறைந்த நிலத்தடி நீர் உள்ள 1,592 வட்டாரங்களை கண்டறிந்து, நீர் சக்தி இயக்கத்தின் கீழ் அவற்றை மேம்படுத்துதல் போன்ற நீர்வள மேம்பாட்டுத் திட்டங்கள் பெரும் பயன்அளிக்கும். இவற்றை மாநில அரசின் திட்டங்களோடு ஒன்றிணைத்து செயல்படுத்த வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெறும் கடன்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் அளிப்பதற்காக 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, ஆண்டொன்றுக்கு ரூ.5 கோடிக்கு குறைவாக விற்பனை செய்யக்கூடிய தொழில் நிறுவனங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை சேவை வரி செலுத்தும் சலுகை மற்றும் சிறு வணிகர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கக்கூடிய 3 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத் திட்டம், 100 புதிய கலைஞர்களுக்கான தொழில் தொகுப்புகளை தொடங்குதல் போன்ற அறிவிப்புகள் அதிக அளவில் இத்தகைய நிறுவனங்களை கொண்டுள்ள தமிழ்நாட்டிற்கு பயனளிக்கும். இவற்றை நான் வரவேற்கிறேன்.

அனைத்து துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட இந்த நிதிநிலை அறிக்கையை நான் வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story