ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் : தொழிற்சங்கங்கள் கோரிக்கை
ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வாரிய கூட்டத்தில் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
சென்னை,
ரெயில்வேயை தனியார்மயமாக்கும் நிர்வாகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு ரெயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன்(எஸ்.ஆர்.எம்.யூ) பொதுச்செயலாளர் கண்ணையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த மாதம் ரெயில்வே வாரிய தலைவர் முக்கிய வழித்தடங்களில் அதிக பொதுமக்கள் பயன்படுத்தும் 2 ரெயில்களை ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். ரெயில் டிக்கெட்டுகளில் கொடுக்கப்படும் மானியத்தை விருப்ப முறையில் பெற வேண்டும். ரெயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் தயாரிக்கும் நிறுவனங்களை ‘கார்ப்பரேட்’ நிறுவனமாக மாற்ற வேண்டும் உள்ளிட்டவைகள் அடங்கிய சுற்றறிக்கையை ரெயில்வே வாரிய உறுப்பினர்களுக்கு அனுப்பினார்.
இதற்கு ரெயில்வே வாரிய தலைவர் தலைமையில் நடைபெற்ற வாரிய கூட்டத்தில் எங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம். மேலும் ‘கார்ப்பரேட்’ நிறுவனமாக மாற்றப்பட்ட பி.எஸ்.என்.எல்., வி.எஸ்.என்.எல். உள்ளிட்டவைகள் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகின்றனர். இதைப்போல் ‘கார்ப்பரேட்’ நிறுவனமாக மாற்றப்பட்ட நிலக்கரி நிறுவனங்களும் தற்போது கடனில் மூழ்கியுள்ளன.
இந்திய ரெயில்வேயில் உள்ள ரெயில் பெட்டி மற்றும் என்ஜின் தயாரிக்கும் நிறுவனங்கள் தற்போது அதிக லாபத்தில் இயங்கி வருகின்றன. கடந்த 2009-10 நிதி ஆண்டில் ஒரு பெட்டியை தயாரிக்க 10 தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். ஆனால் 2018-19 நிதி ஆண்டில் 3 தொழிலாளர்களே தேவைப்படுகின்றனர்.
இதன்மூலம் குறைந்த தொழிலாளர்களை கொண்டு அதிக பெட்டிகள் தயாரிக்கப்பட்டு லாபத்தில் இயக்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே நல்ல லாபத்தில் இயங்கி வரும் இந்த தொழிற்சாலைகளை ‘கார்ப்பரேட்’ நிறுவனமாக மாற்றும் திட்டத்தை கைவிட்டு, மராட்டிய மாநிலத்தில் புதிதாக தொடங்க உள்ள தொழிற்சாலைகளை ‘கார்ப்பரேட்’ நிறுவனமாக மாற்றி தனியாரிடம் ஒப்படைக்கலாம் என கூறியுள்ளோம்.
ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் 2 ரெயில்களை தனியார்மயமாக்க திட்டத்தில் முதல் ரெயிலாக லக்னோ-டெல்லி இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் மூலம் ரூ.65 கோடிக்கு ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பயணிகளுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. இதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று ரெயில்வே வாரியத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story