‘பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்’ எடப்பாடி பழனிசாமி பேட்டி
பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கக்கோரி மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- அ.ம.மு.க.வின் கூடாரம் கலைந்து கொண்டிருக்கிறதே? மொத்தமாக அ.தி.மு.க.வில் எப்போது இணையும்?
பதில்:- அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், நானும் ஏற்கனவே அழைப்பு விடுத்திருக்கிறோம். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மீண்டும் அ.தி.மு.க.வை வலுப்படுத்தி, அடுத்து வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறவேண்டும் என்ற அடிப்படையிலேயே அழைப்பு விடுத்தோம். அந்த அழைப்பை ஏற்று விலகிச் சென்றவர்கள் படிப்படியாக அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி:- ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுக்குமா?
பதில்:- ‘நீட்’ தேர்வை ரத்து செய்யவேண்டும். தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது கூட தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றோம்.
கேள்வி:- சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து அனைத்து கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறியிருக்கிறீர்கள். இந்த மாதிரி பல்வேறு விஷயங்களிலும் இணைந்து செயல்படுவீர்களா?
பதில்:- சேலம் உருக்காலை என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பயன்பெறுகின்ற மிகப்பெரிய நிறுவனம் ஆகும். அந்த நிறுவனத்தை தனியாரிடத்திலே ஒப்படைக்கக்கூடாது. மற்ற மாநிலங்களில் ஒரு பிரச்சினை என்று வருகின்றபோது அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அதனை தீர்க்கிறார்கள். அதுபோல சேலம் உருக்காலை விவகாரத்தில் எந்தவித மனமாச்சரியம் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இணைந்து குரல் கொடுத்து தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுப்போம்.
கேள்வி:- மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை தாறுமாறாக உயர்த்தியுள்ளதே?
பதில்:- பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தால் மக்களுக்கு சவுகாரியமாக இருக்கும். இதை குறைக்கக்கோரி மத்திய அரசிடம் நாங்கள் வலியுறுத்துவோம்.
கேள்வி:- பட்ஜெட்டில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லையே?
பதில்:- இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கிவிட்டார்கள். அது முழுமையாக முடிந்த பிறகு, தேவையான நிதி எவ்வளவு என்பது கணக்கிடப்படும். அதன் பிறகு தான் மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டை எடுக்கும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
Related Tags :
Next Story