பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு : ‘ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவராமல் வரியை உயர்த்தி விட்டார்களே’ என்று ஆதங்கம்


பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு வாகன  ஓட்டிகள்  எதிர்ப்பு : ‘ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவராமல் வரியை உயர்த்தி விட்டார்களே’ என்று ஆதங்கம்
x
தினத்தந்தி 7 July 2019 5:34 AM IST (Updated: 7 July 2019 5:34 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்–டீசல் விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருவார்கள் என நினைத்தால் வரியை உயர்த்திவிட்டார்களே என்றும் ஆதங்கம் தெரிவித்தனர்.

சென்னை, 

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது, மின்சார கார், வீடு வாங்குவோருக்கு சலுகை, வியாபாரிகளுக்கு ஓய்வூதியம், சுயஉதவி குழு பெண்களுக்கு ரூ.1 லட்சம் கடன் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பெட்ரோல்–டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் சிறிது அதிருப்தியையும் இந்த பட்ஜெட் சம்பாதித்து இருக்கிறது என்பதே உண்மை. 

பெட்ரோல்–டீசல் மீதான சிறப்பு கூடுதல் உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.1–ம், சாலை வரியாக லிட்டருக்கு ரூ.1–ம், கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரி டன்னுக்கு ரூ.1–ம் அதிகரிக்கப்படுகிறது என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக பெட்ரோல்–டீசல் விலை நேற்று முன்தினம் நள்ளிரவே உயர்ந்துவிட்டது. 

இந்த விலை உயர்வு குறித்தும், பட்ஜெட் குறித்தும் பொதுமக்களில் பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:–

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி ரக்ஷிதா:–

நாட்டின் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் எப்போதுமே உயர்ந்துகொண்டிருக்கும் பெட்ரோல்–டீசல் விலையில் கை வைக்காமல் இருந்திருக்கலாம். ஏற்கனவே படிப்படியாக பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்து வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த நிலையில் வரியை மேலும் உயர்த்தி பெட்ரோல் விலையை அதிகரித்துவிட்டார்கள். இது நடுத்தர மக்களை நிச்சயம் பாதிக்கும். இந்த விலையில் பெட்ரோல் போட்டு வண்டி ஓட்டுவதைவிட மெட்ரோ ரெயிலிலேயே சொகுசாக சென்றுவிடலாம். இந்த அளவிலாவது பெட்ரோல்–டீசல் விலை உயர்வை மத்திய அரசு நிறுத்திவிட்டால் நல்லது, இல்லையேல் மக்கள் வெறுப்பை சம்பாதிக்க வேண்டியது தான். 

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி ஹேமந்த் ஜெயராமன்:–

வணிகர்களின் நலன், வணிக மேம்பாட்டுக்காக பல நல்ல திட்டங்களை அறிவித்துவிட்டு, வியாபாரிகளை சங்கடப்படுத்தும் வகையில் பெட்ரோல்–டீசல் விலையை உயர்த்தி இருக்கும் மத்திய அரசின் போக்கை என்னவென்று சொல்வது? ஏற்கனவே வாடகை, ஆள் கூலி உள்ளிட்ட காரணங்களால் காய்கறி–பழங்கள் விலை உயர்ந்துவருகிறது. வியாபாரம் மந்தமான இந்த சூழலில், இந்த விலையேற்றம் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். கோயம்பேட்டுக்கு பழங்கள், காய்கறி வெளிமாநிலங்களில் இருந்து தான் கொண்டுவரப்படுகிறது. இந்த விலை உயர்வால் காய்கறி–பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை நிச்சயம் உயரும். 

ஆட்டோ டிரைவர் முருவம்மாள்:–

நான் 9 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். எனக்கு தெரிந்து தேர்தல் நடைபெறும் சூழலில் மட்டுமே பெட்ரோல்– டீசல் விலை குறையும். மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் சமீபகாலமாக பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்வது வேதனையை தருகிறது. ஏற்கனவே சவாரி இல்லாமல் வீதிகளில் சுற்றித்திரியும் வேளையில், இந்த விலை ஏற்ற அறிவிப்பு வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வரும் என்று எதிர்பார்த்த பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்திருப்பது வேதனையானது. வாகனங்களை மூலதனமாக கொண்டு பணியாற்றும் தொழிலாளர்களை மத்திய அரசு நினைத்துப்பார்க்கவில்லை. நாட்டின் வளர்ச்சியை இதில் தான் காட்டவேண்டுமா?  

டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்  பி.பெருமாள் சாமி:–

என்னை பொறுத்தவரை இந்த திட்டம் அவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடாது. இது அபாயம் என்று கூறி, அத்தியாவசிய பொருட்களின் விலையை வியாபாரிகள் ஏற்றிவிடக்கூடாது என்று தான் கவலைப்படுகிறேன். பொதுவாகவே பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்தால், அதை காரணம்காட்டி உணவு பொருட்களின் விலை உயரும். உதாரணத்துக்கு 500 கி.மீ. தூரம் ஒரு ‘டன்’ கேரட் கொண்டு சென்றால் டீசலுக்கு கூடுதலாக ரூ.750 செலவாகும். அதன்படி ஒரு கிலோ கேரட்டுக்கு 75 பைசா தான் விலை அதிகரிக்க வேண்டும். ஆனால் அதுதான் நடக்கிறதா? என்றால் இல்லை. வணிகர்களுக்காக அறிவிக்கப்பட்ட பல்வேறு நல்ல திட்டங்களை பார்க்கும்போது இந்த விலையேற்ற அறிவிப்பு பெரிய பாதிப்பு கிடையாது.   

இல்லத்தரசி பி.விமலா:– நாட்டின் வளர்ச்சி என்று பெட்ரோல்–டீசல் விலையை உயர்த்துவது நியாயமற்றது. இதனால் அலுவலக ஊழியர்கள், நடுத்தர குடும்பத்தினர் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஒரு மாதம் ஆகும் பெட்ரோல் செலவு, இனி 20 அல்லது 25 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக அமைந்துவிடும். தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் விலை உயர்ந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் இவை அடிக்கடி வாங்கும் பொருட்கள் இல்லை. ஆனால் பெட்ரோல்–டீசல் என்பது தினமும் பயன்படுத்தப்படும் அத்தியாவசியமான எரிபொருள். பெட்ரோல்–டீசல் விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்கலாம்.

லாரி டிரைவர் சி.ஆனந்த்:–

பெட்ரோல்–டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருவார்கள் என்று பெரிய அளவில் எதிர்பார்த்தோம். ஆனால் மாறாக விலை இன்னும் உயர்ந்திருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல்–டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த உயர்வும் நுகர்வோரை அதிகம் பாதிக்கும். ஏற்கனவே லாரி தொழில் முடங்கிவருகிறது. இந்த சிறப்பு வரியால் இன்னும் லாரி தொழில் பாதிக்கப்படும். இந்த நடவடிக்கை அவசியமில்லாதது என்றே கருதுகிறேன். 

பட்ஜெட்  அறிவிப்பு  எதிரொலி: பெட்ரோல்  விலை  ரூ.2.57  அதிகரித்தது

பட்ஜெட்டில் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல்–டீசல் விலை உடனடியாக உயர்ந்துவிட்டது. நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.19–க்கும், டீசல் ரூ.67.96–க்கும் விற்பனை ஆனது. ஆனால் நேற்று பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.76–க்கும், டீசல் ரூ.70.48–க்கும் விற்பனை ஆனது. 

பெட்ரோல் விலை 2 ரூபாய் 57 பைசாவும், டீசல் விலை 2 ரூபாய் 52 பைசாவும் உயர்ந்திருக்கிறது. 

Next Story