மாநில செய்திகள்

காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்ட சமூக ஆர்வலர் முகிலன் அதிரடி கைது கற்பழிப்பு வழக்கில் போலீசார் நடவடிக்கை + "||" + Social activist Mukhilan Action arrested In the case of rape Police action

காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்ட சமூக ஆர்வலர் முகிலன் அதிரடி கைது கற்பழிப்பு வழக்கில் போலீசார் நடவடிக்கை

காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்ட சமூக ஆர்வலர் முகிலன் அதிரடி கைது கற்பழிப்பு வழக்கில் போலீசார் நடவடிக்கை
காணாமல்போய் கண்டுபிடித்து மீட்கப்பட்ட சமூக ஆர்வலர் முகிலன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்கில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சென்னை,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய வீடியோவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி சமூக ஆர்வலர் முகிலன் வெளியிட்டார்.


அன்றைய தினம் இரவு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு ரெயிலில் சென்றபோது முகிலன் மாயமானார். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. முகிலன் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர். சி.பி.சி.ஐ.டி போலீசாரும் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருப்பதி ரெயில் நிலையத்தில் வைத்து முகிலன் நேற்று முன்தினம் இரவு பத்திரமாக மீட்கப்பட்டார். அவரை திருப்பதி ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார், வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் தமிழக ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தமிழக ரெயில்வே போலீசார் முகிலனை நேற்று அதிகாலை 4 மணியளவில் சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சென்னை எழும்பூர் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் முகிலன் காவலில் வைக்கப்பட்டார்.

அங்கு அவர் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டார். காலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாங்கிக்கொடுத்த இட்லியை வாங்கி சாப்பிட்டார். அதன்பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரிடம் விசாரணையை தொடங்கினர். சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சங்கர், சூப்பிரண்டு மல்லிகா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முகிலனிடம் விசாரணை நடத்தினார்கள். முகிலன் கடத்தப்பட்டாரா? இத்தனை நாட்கள் எங்கு தங்கியிருந்தார்? என்பன போன்ற விவரங்களை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் துருவி, துருவி கேட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளின் கேள்விகளுக்கு முகிலன் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனது போராட்டங்கள் பற்றி தான் முகிலன், போலீசாரிடம் விளக்கமாக கூறினார்.

தான் காணாமல் போனது பற்றிய தகவல்கள் எதையும் முகிலன் கூற மறுத்தார். ‘என்னை கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்துங்கள், நீதிபதியிடம் எல்லா விவரத்தையும் விளக்கமாக கூறுகிறேன்’ என்று முகிலன் போலீஸ் அதிகாரிகளிடம் பதில் அளித்ததாக தெரிகிறது.

இருந்தாலும் மாலை வரை அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி தகவல் ஒன்றை தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் முகிலன் மீது கற்பழிப்பு, திருமண ஆசை காட்டி ஏமாற்றுதல் மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகியவற்றின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்திருந்தனர்.

அந்த வழக்கில் முகிலன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், முதலில் அவர் சென்னை எழும்பூர் 2-வது மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், அதன்பிறகு நாளை (இன்று) அவர் கரூர் கோர்ட்டில் முறையாக ஆஜர்படுத்தப்படுவார் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

முகிலன் மீது கடந்த மார்ச் மாதம் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் கொடுத்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் எம்.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளேன். முகிலன் நடத்திய போராட்டங்களால் ஈர்க்கப்பட்டு அவருடன் ஒன்றாக இணைந்து பல்வேறு போராட்டங்களில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். அவர் என்னோடு அன்பாகவும், பாசமாகவும் பழகினார். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நான் முகிலனுடன் கலந்துகொண்டேன்.

நெடுவாசல் பஸ் நிறுத்தம் அருகில் தங்கும் விடுதியில் உள்ள அறையில் நாங்கள் ஒன்றாக தங்கினோம். அப்போது முகிலன் என்னை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். என்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகளை கூறி பலமுறை பலாத்காரம் செய்தார். பின்னர் அவர் என்னை திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமண ஆசைகாட்டி நம்பவைத்து எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மனு தான் வழக்காக பதிவு செய்யப்பட்டது. குளித்தலை அனைத்து மகளிர் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முகிலன் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர். கடந்த 22 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது மனைவி பெயர் பூங்கொடி. இவரது ஒரே மகன் கார்முகில், கல்லூரி ஒன்றில் எம்.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். முகிலன் மீட்கப்பட்ட தகவல் தெரிந்தவுடன் அவரது மனைவி பூங்கொடி, காரில் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். கள்ளக்குறிச்சி அருகே வரும்போது அவரது கார் விபத்தில் சிக்கியது.

அந்த விபத்தில் பூங்கொடியும், அவருடன் வந்த சமூக ஆர்வலர் கனிமொழி என்ற கனி ஓவியா ஆகியோரும் காயம் அடைந்தனர். தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்ற அவர்கள், உடனடியாக இன்னொரு காரில் சென்னைக்கு புறப்பட்டு வந்தனர். நேற்று மாலை பூங்கொடி, சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்தார். போலீஸ் அனுமதியுடன் தனது கணவர் முகிலனை சந்தித்து பேசினார்.

முகிலனை பல்வேறு சமூக ஆர்வலர்கள் நேற்று சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து சந்தித்து பேசினார்கள். சமூக ஆர்வலர் ஒருவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முகிலன் இயல்பான நிலையில் இல்லை. அவர் ஒரு சமூக போராளி. மக்களுக்காக துணிச்சலாக எத்தனையோ போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அவர் உடல் முழுக்க காயங்கள் உள்ளன. நெஞ்சுவலியால் கூட அவர் அவதிப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளவில்லை. பொதுவாக அவர் சித்த மருத்துவ முறையிலேயே எந்த நோய்க்கும் சிகிச்சை பெற்றுக்கொள்வார். அவர் காட்பாடிக்கு அழைத்து வரப்பட்டவுடன், ஆஸ்பத்திரி ஒன்றில் போலீசார் அவரை சிகிச்சை பெற வைத்துள்ளனர். நாய் கடிக்காக அவருக்கு ஊசி போடப்பட்டு உள்ளது. அவர் சர்க்கரை நோயாளி. மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் கரூர் கோர்ட்டில் சமூக ஆர்வலர் முகிலன் ஆஜர்
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் கரூர் கோர்ட்டில் சமூக ஆர்வலர் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார்.
2. சமூக ஆர்வலர் மேதா பட்கரின் 9 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நிறைவு
சமூக ஆர்வலர் மேதா பட்கர் 9 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதத்தினை முடித்து கொண்டுள்ளார்.
3. மத்திய அரசு திட்டங்களை விமர்சித்த சேலம் சமூக ஆர்வலர் மீது பா.ஜனதாவினர் தாக்குதல்
மத்திய அரசு திட்டங்களை விமர்சனம் செய்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷை பா.ஜனதாவினர் நேற்று தாக்கினர்.
4. சமூக ஆர்வலர் முகிலன் திருப்பதியில் சிக்கினார் - விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் மாயமான சமூக ஆர்வலர் முகிலன் திருப்பதி ரெயில் நிலையத்தில் சிக்கினார். அவர் விசாரணைக்காக சென்னை அழைத்துவரப்பட்டார்.
5. கொலை செய்யப்பட்ட சமூகஆர்வலர் குடும்பத்துக்கு நிவாரணம் கிராம மக்கள் கோரிக்கை
கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை