வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு
வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் திமுகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் தலா 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். இந்த 2 கட்சிகளும், தங்களது கூட்டணியில் உள்ள கட்சிக்கு தலா ஒரு இடத்தை வழங்கியுள்ள நிலையில், தங்களது கட்சி சார்பில் தலா 2 வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
அ.தி.மு.க. சார்பில் கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் முகமது ஜானும், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. சார்பில் தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகமும், வக்கீல் வில்சனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. கூட்டணி கட்சியான ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
தி.மு.க. வேட்பாளர்களும் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரான வைகோவும் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களும் மற்றும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசும் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாளான இன்று மனுதாக்கல் செய்கிறார்கள்.
மாநிலங்களவைக்கு 5 பேர் போட்டியின்றி தேர்வாவது உறுதியான நிலையில், வைகோ மனு ஏற்கப்படுமா? என்பது நாளை வேட்புமனு பரிசீலனையின் போது தெரிய வரும்.
இந்த நிலையில் திமுகவில் இருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், மேலும் ஒருவர் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. . திமுகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் நிலைமையை எதிர்கொள்ள திமுக தயாராகிறது.
Related Tags :
Next Story