மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவது பற்றி சட்ட நிபுணர்களுடன் விரிவாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார்.
சென்னை,
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களை குடியரசு தலைவர் நிராகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
"இந்த மன்றத்தில் மத்திய அரசின் நடவடிக்கை மூலம் தமிழக சட்டமன்றத்திற்கு இருந்த சட்டமியற்றும் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. தமிழக சட்டமன்றத்தின் ஆணிவேரை சாய்த்து பார்க்கும் அளவில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
நீட் விலக்கு மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக" மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதற்கு பதில் அளித்த சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், நீட் தேர்வு விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் ஆராயப்படும். மசோதா சரி செய்யப்பட்டு மீண்டும் மத்திய அரசை வலியுறுத்த வாய்ப்பு இருக்கிறது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தகவலை, நிராகரிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை, மீண்டும் வலியுறுத்துவோம் என கூறினார்.
தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவது பற்றி சட்ட நிபுணர்களுடன் விரிவாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி பேசும்போது, நீட் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவு தமிழக அரசுக்கு தெரியுமா? தெரியாதா?. இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, திராவிட கட்சிகள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம், ஆனால் காங். கட்சி அப்படி இல்லை . நீட் தேர்வு விவகாரத்தில் காங். மிகப்பெரிய நாடகமாடுகிறது என கூறினார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது;-
மத்திய அரசை கண்டித்து கண்டன தீர்மானம் போட முடியாது. உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடியுமா? என ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
Related Tags :
Next Story