உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 46 ஆயிரம் தனித்தமிழ் பெயர் புத்தகம் வெளியீடு


உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 46 ஆயிரம் தனித்தமிழ் பெயர் புத்தகம் வெளியீடு
x
தினத்தந்தி 9 July 2019 6:05 AM IST (Updated: 9 July 2019 6:05 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் நடந்த உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 46 ஆயிரம் தனித்தமிழ் பெயர் கொண்ட புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

சிகாகோ,

10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் 32-வது தமிழ் விழா மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா ஆகியவை அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்தது. வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழியக்கத்தின் தலைவருமான கோ.விஸ்வநாதன் முயற்சியில் 46 ஆயிரம் தமிழ் பெயர்களை உள்ளடக்கிய ‘சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர்கள்’ என்ற நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலுக்கு தொகுப்பாசிரியர்களாக வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி, எழுத்தாளர் பவளசங்கரி ஆகியோரும் பதிப்பாசிரியராக வே.பதுமனாரும் பங்காற்றியுள்ளனர்.

‘சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர்கள்’ நூலை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை (பெட்னா) தலைவர் சுந்தர் குப்புசாமி, வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் வி.செல்வம், சு.வெங்கடேசன் எம்.பி., தொழிலதிபர் பால் பாண்டியன், ஹார்வர்டு தமிழ் இருக்கை குழுவை சேர்ந்த டாக்டர் சு.சம்பந்தம், நிர்மலா பெரியசாமி, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், வாஷிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த விழாவில் தமிழியகத்தின் மாநில செயலாளர் மு.சுகுமாரும் கலந்துகொண்டார்.

விழாவில் கோ.விஸ்வநாதன் பேசும்போது, இன்றைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதை விட பிறமொழி பெயர் களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது கவலை அளிக்கிறது. ஒருவருடைய பெயர் என்பது அந்த மனிதனின் பொருள் பொதிந்த அவனுடைய தனித்துவமான அடையாளமாகும். பிற மொழியில் பொருளற்ற பெயர்களை வைப்பது அடையாளத்தை தொலைத்து நிற்கும் நிலையை ஏற்படுத்தும் என்றார்.

ச.பார்த்தசாரதி பேசும்போது நம்முடைய பண்பாட்டை எடுத்துக்கூறும் ஒரு நல்ல தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு இந்த நூல் பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.

இதற்கிடையே, மாநாட்டில் வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை அமைச்சர் கே.பாண்டிய ராஜன் திறந்து வைத்தார்.

Next Story