தமிழகத்தில் 16 இடங்களில் ரூ.14 கோடியில் புதிய நீதிமன்றங்கள் சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு


தமிழகத்தில் 16 இடங்களில் ரூ.14 கோடியில் புதிய நீதிமன்றங்கள் சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 July 2019 2:30 AM IST (Updated: 10 July 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 16 இடங்களில் ரூ.14 கோடியே 27 லட்சம் மதிப்பில் புதிதாக நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், சென்னை, தர்மபுரி, விழுப்புரத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் முதுகலை சட்டப்படிப்பு தொடங்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று முற்பகல் நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். பின்னர், துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியதாவது:-

பட்டறைப்பெரும்புதூர் மற்றும் புதுப்பாக்கம் வளாகங்களில் இயங்கிவரும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில், அதிவேக இணைய வசதியுடன் கூடிய கம்பியில்லா மின் மண்டலம் (வைபை சோன்) ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும். புதுப்பாக்கம் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, தர்மபுரி மற்றும் விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரிகளில் முதுகலை சட்டப்படிப்பு தொடங்கப்படும்.

திருப்பூரில் ரூ.58.55 லட்சம் செலவில் ஒரு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்கப்படும். திருச்சி மாவட்டம் முசிறியில் ரூ.61.15 லட்சம் செலவில் ஒரு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்கப்படும். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் ரூ.90.49 லட்சம் செலவில் ஒரு கூடுதல் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கூடுதல் மாவட்ட நீதிபதிகளுக்கான குடியிருப்பு ரூ.97.56 லட்சம் செலவில் கட்டப்படும். கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் ரூ.1.08 கோடி செலவில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.1.09 கோடி செலவில் கூடுதலாக ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் ரூ.1.21 கோடி செலவில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ.1.28 கோடி செலவில் ஒரு சார்பு நீதிமன்றம், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் மற்றும் குமாரப்பாளையம் வட்டங்களில் தலா ஒரு நீதிமன்றம் வீதம் 2 குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் ரூ.1.83 கோடி செலவில் அமைக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரியில் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோருக்கான குடியிருப்புகள் ரூ.212.61 லட்சம் செலவில் கட்டப்படும்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் மற்றும் குமாரப்பாளையம் வட்டங்களில் தலா ஒரு நீதிமன்றம் வீதம் 2 மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் ரூ.2.18 கோடி செலவில் அமைக்கப்படும்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, காஞ்சீபுரம் மாவட்டம் பல்லாவரம், திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தலா ரூ.75 லட்சம் வீதம் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story