பள்ளிக்கு ஆட்டோவில் சென்ற மாணவி கீழே விழுந்து சாவு


பள்ளிக்கு ஆட்டோவில் சென்ற மாணவி கீழே விழுந்து சாவு
x
தினத்தந்தி 10 July 2019 3:32 AM IST (Updated: 10 July 2019 3:32 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கு ஆட்டோவில் சென்ற மாணவி கீழே விழுந்த மாணவியை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்

வேலூர்,

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மளிகைதோப்பு பகுதியை சேர்ந்தவர் முனிசாமி. இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு திவ்யதர்ஷினி (வயது 7) என்ற மகளும், லோகேஷ் (5) என்ற மகனும் உள்ளனர். திவ்யதர்ஷினி 2-ம் வகுப்பும், லோகேஷ் 1-ம் வகுப்பும் ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள இந்து ஆரம்பப் பள்ளியில் படித்து வந்தனர். நேற்று காலை வழக்கம் போல திவ்யதர்ஷினியும், லோகேசும் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றனர். ஒரே ஆட்டோவில் 15 பேர் செல்வதால் இடநெருக்கடியால் திவ்யதர்ஷனி ஆட்டோவின் முன்பக்கத்தில் அமர்ந்து இருந்தாள். ஆம்பூர் நகராட்சியில் குடிநீர் பணி மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அவ்வாறு மோசமான சாலையில் ஆட்டோ வந்தபோது மாணவி திவ்யதர்ஷினி திடீரென ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தாள். இதில் அவளுக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யதர்ஷினி பரிதாபமாக இறந்தாள்.

இச்சம்பவம் குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story