பள்ளி காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 9 பேர் மீது வழக்கு


பள்ளி காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 9 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 July 2019 4:15 AM IST (Updated: 10 July 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி காவலர், துப்புரவு பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 2012-ம் ஆண்டு 13 பள்ளி காவலர்கள் மற்றும் 25 துப்புரவு பணியாளர்கள் நியமனத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. துப்புரவு ஊழியர்கள் பணிக்கு 116 பேர் விண்ணப்பித்த நிலையில் 65 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். 43 பேர் பள்ளி காவலர் பணிக்கு விண்ணப்பித்ததில் 30 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 8 பேரும், 20 துப்புரவு ஊழியர்களும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

எம்.எல்.ஏ.க்கள், கல்வி அதிகாரிகள் சிபாரிசு அடிப்படையில் இந்த நியமனம் நடைபெற்று உள்ளதாகவும், இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அந்த பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், நேர்காணலில் பங்கேற்ற கணேசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் 2012-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரிக்க கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.க்களாக இருந்த முத்துராமலிங்கம், கதிரவன், ஏ.கே.போஸ் மற்றும் தற்போதைய கல்வித்துறை இணை இயக்குனர் நாகராஜ முருகன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஏ.கே.போஸ் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முறைகேடு வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கல்வி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கல்வி மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story