என் சுயநலத்துக்காக எந்த முடிவும் எடுத்தது இல்லை: ‘நாடாளுமன்றத்தில் தமிழகத்துக்காக குரல் கொடுப்பேன்’ வைகோ பேட்டி
நாடாளுமன்றத்தில் தமிழகத்துக்காக குரல் கொடுப்பேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் தேசத்துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கின்றேன். ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய இருக்கிறோம். தேசத்துரோக வழக்கில் விடுதலைக்கு பிறகு இந்தியாவில் முதன் முதலாக தண்டிக்கப்பட்டது நான் என்பது பெருமை தான். இதனால் இந்திய சட்ட வரலாற்றில் எனக்கு ஒரு இடம் கிடைத்துவிட்டது. மேல் முறையீட்டில் நீதி கிடைக் கும் என்று நம்புகிறேன்.
ம.தி.மு.க.வை பாதுகாப்பவர்கள் தொண்டர்கள். அவர் களுடைய உணர்வுகளைத்தான் தலைமை எதிரொலிக்கின்றது. அவர்களுடைய ஒப்புதலை பெற்றுத்தான் நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தோம். நான் எனக்கு பதவி கேட்பவனா? 1998-ல் என்னை மந்திரி ஆக சொன்னார் வாஜ்பாய். 1999-லும் சொன்னார். 2 முறையும் நான் மறுத்து விட்டேன். அதற்கு முன்பு, 1989-ல் வி.பி.சிங் உயர்ந்த பதவி தருவதாகச் சொன்னார். அதையும் மறுத்து விட்டேன்.
என் சுயநலத்துக்காக எந்த முடிவும் எடுத்தது இல்லை. இந்த முறை உங்களை தவிர வேறு யாரை பற்றியும் யோசிக்கக்கூடாது என்று கட்சி முடிவு எடுத்தது. நீங்கள் (வைகோ) செல்வதாக இருந்தால் மாநிலங்கள் அவைக்கு ஒரு இடம் தருகின்றோம் என்று சொன்னார்கள். எனவே கட்சியின் ஒட்டுமொத்த கருத்தின்படிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த இயக்கத்தில் மற்றவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்பதை விரும்புகின்றவன் நான். அமைச்சர்களாக ஆக்கி மகிழ்ந்தவன் நான். எம்.பி.க்கள் ஆக்கி மகிழ்ந்தவன் நான்.
நாடாளுமன்ற மாநிலங்கள் அவை தேர்தலுக்காக என்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டது என்றவுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார். அதற்கு முன்பு என் மனு ஒருவேளை நிராகரிக்கப்படலாம் என்று நான் அவரிடம் கூறினேன். இல்லை. உங்கள் மனு கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொன்னார். ஒருவேளை நிராகரிக்கப்பட்டால், மாற்று ஏற்பாடு என்ன? என்று நான்தான் அவரிடம் கேட்டேன்.
அதன்படி அவர் நேற்று (நேற்று முன்தினம்) ஒரு ஏற்பாடு செய்தார். எந்த பதவியையும் எதிர்பார்த்து நான் இல்லை. நான் வாங்குகின்ற மாத ஊதியத்தை முழுமையும் கட்சிக்கணக்கில் தான் வரவு வைக்கப்போகின்றேன். என்னுடைய உடல் நலம் எந்த அளவுக்கு ஒத்துழைக்கின்றதோ, அந்த அளவுக்கு இந்த கட்சிக்காக உழைப்பேன்.
நாடாளுமன்றத்தில் கடுமையான கருத்து விமர்சனங்களை முன்வைப்பேன். நான் மாநிலங்கள் அவைக்கு சென்று 23 ஆண்டுகள், மக்கள் அவைக்கு சென்று, 17 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் எனக்கு அறிமுகம் இல்லை. பழக்கம் கிடையாது. இப்போது அங்கே நான் ஒரு புது ஆள். அதுவும் ஒரு கட்சியின் ஒரேயொரு உறுப்பினர். எனவே எல்லா விவாதங்களிலும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காது. கிடைத்தாலும், கடைசியாக இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள்தான் கிடைக்கும்.
ஆகவே, தோழர்கள் எதிர்பார்ப்பது, சாதி, மதம், கட்சி எல்லைகளை கடந்து எல்லோருடைய எதிர்பார்ப்பையும் எப்படி நிறைவேற்றுவது என்ற திகைப்பில் கவலையில் இருக்கிறேன்.
7 பேர் விடுதலை தாமதம் ஆவதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு. தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டும். கருத்து உரிமை, பேச்சு உரிமையை காக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழவேண்டும். தமிழ் ஈழம் அமைவதற்குக் குரல் கொடுக்கவேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், அணுக்கழிவுகளை கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்திற்குள் புதைக்கக் கூடாது. நியூட்ரினோ திட்டம் கூடாது. மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது. அதை நிறுத்தவேண்டும் என்ற வகையில் குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story