சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்தை ஆய்வுக்கு எடுக்கக்கூடாது வைகோ வலியுறுத்தல்


சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்தை ஆய்வுக்கு எடுக்கக்கூடாது வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 July 2019 6:51 PM GMT (Updated: 10 July 2019 6:51 PM GMT)

சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்தை ஆய்வுக்கு எடுக்கக்கூடாது என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பு அணை கட்டுவதில் கர்நாடக அரசு முனைப்பாக இருக்கிறது. 4 ஆண்டுகளுக்குள் மேகதாது அணை கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க சட்டத்துக்கு எதிரானது. இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தின் கோரிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்ய இருப்பதாகவும், அதற்காக வருகிற 19–ந்தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் மத்திய அரசு கர்நாடகா மாநிலத்துக்கு நயவஞ்சகமாக துணை போவது கண்டனத்துக்கு உரியதாகும்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகம் மேற்கொண்டு வரும் சதி திட்டத்துக்கு மத்திய அரசு துணை போவதை தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே புதுடெல்லியில் 19–ந்தேதி நடைபெற உள்ள சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்தை ஆய்வுக்கு எடுக்கக் கூடாது, நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story