ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்ல சோதனை ஓட்டம் முடிந்தது இன்று முதல் தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர் அனுப்ப ஏற்பாடு
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக சோதனை ஓட்டம் மேற்கொள்ளும் பணி நேற்று முடிந்தது.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக சோதனை ஓட்டம் மேற்கொள்ளும் பணி நேற்று முடிந்தது. இதனையடுத்து இன்று (வியாழக்கிழமை) முதல் தினமும் 4 முறை ரெயிலில் மொத்தம் 1 கோடி லிட்டர் குடிநீர் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.65 கோடி ஒதுக்கீடு
சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த மாதம் 21-ந் தேதி ரூ.65 கோடி நிதியை ஒதுக்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.
அந்த நிதியின் மூலம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே பார்சம்பேட்டையில் உள்ள 5-வது யார்டுக்கு மேட்டுசக்கர குப்பம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்காக குழாய் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்றது.
அதே நேரத்தில் பார்சம்பேட்டை யார்டிலும் ராட்சத குழாய்கள் நிறுவும் பணியும் தீவிரமாக நடந்தது. 95 சதவீத பணிகள் முடிந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 50 வேகன்கள் கொண்ட சரக்கு ரெயில் நேற்று முன்தினம் காலை ஜோலார்பேட்டைக்கு வந்து சேர்ந்தது.
சோதனை ஓட்டம்
இதனை தொடர்ந்து 50 வேகன்களுக்கும் ஒரே நேரத்தில் குடிநீர் ஏற்றுவதற்காக ராட்சத குழாயில் இருந்து 50 வளைவு குழாய்கள் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு நேற்று காலை பணிகள் முடிந்தன. இதன்பின் மேட்டுசக்கரகுப்பம் குடிநீர் தொட்டியின் நீரேற்று நிலையத்தில் இருந்து ரெயில்வே வேகன்களுக்கு தண்ணீர் ஏற்ற சோதனை ஓட்டம் நடத்துவதற்காக பூஜை நடந்தது. இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஒப்பந்ததாரர் வேலுமணி, ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பூஜை முடிந்ததும் நண்பகல் 12.30 மணியளவில் மேட்டுசக்கரகுப்பம் நீரேற்று நிலையத்தில் இருந்து சோதனை ஓட்டம் தொடங்கும் வகையில் தண்ணீர் பம்ப் செய்யப்பட்டது. அப்போது ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள இடத்தில் குழாயில் நீர்க்கசிவு ஏற்பட்டு அந்த இடத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியது.
பின்னர் அங்கு வெளியில் தேங்கிய தண்ணீர் மீண்டும் குழாய் மூலம் கழிவுகளுடன் வரலாம் என்பதால் முதலில் வெளியில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். கசிவு ஏற்பட்ட குழாயை சீரமைக்கும் பணியும் முழுவீச்சில் நடந்தது. அந்த பணி நேற்று இரவு 7 மணியளவில் முடிந்தது.
குடிநீர் ஏற்றும் பணி
இதனிடையே பார்சம்பேட்டை யார்டில் வளைவு குழாய் மூலம் வேகன்களுக்கு நீர் ஏற்றுவதற்காக ஒவ்வொரு வேகனுக்கும் 2 பணியாளர் வீதம் நியமிக்கப்பட்டு மொத்தம் 100 பேர் தண்ணீரை ஏற்றுவதற்கு தயாராக இருந்தனர். அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் சோதனை ஓட்டமும் முடிந்தது. இதனையடுத்து நேற்று இரவு ரெயில் வேகன்களுக்கு குடிநீர் ஏற்றும் பணி நடந்தது. ஒவ்வொரு வேகனிலும் 50 ஆயிரம் லிட்டர் குடிநீர் என்ற கணக்கீட்டின்படி 50 டேங்கரிலும் மொத்தம் 25 லட்சம் லிட்டர் குடிநீர் ஏற்றப்பட்டது.
குடிநீர் ஏற்றப்பட்ட ரெயிலை இன்று காலை மெட்ரோ அதிகாரிகள் கொடிஅசைத்து தொடங்கி வைக்க உள்ளனர். அதன்பின் ரெயில் சென்னைக்கு புறப்படுகிறது. இந்த தண்ணீர் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குழாய் மூலம் தொட்டியில் இறக்கப்பட்டபின் மீண்டும் ரெயில் வேகன்கள் ஜோலார்பேட்டைக்கு திரும்பும். மொத்தம் நாள் ஒன்றுக்கு 4 முறை இதே ரெயில் குடிநீர் ஏற்றிச்செல்லும். தினமும் ஒரு கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
ரெயில் தண்ணீர் ஏற்றுவதற்காக வந்து நின்றபின் அதன் மேல் உயர்அழுத்த மின்பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தண்ணீர் ஏற்றப்படும் என்றும், அந்த பணிகள் முடிந்தபின் மீண்டும் அந்த பாதைக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டு ரெயில் புறப்பட்டுச்செல்லும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story