மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு
மதுவுக்கு எதிராக பேனர் வைத்ததாக கைதான வாலிபரை தனது சொந்த ஜாமீனில் விடுவித்த நீதிபதி, போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட தேவர்கண்டநல்லூரில் செயல்பட்டு வந்த மதுக்கடை அப்பகுதி மக்களின் தொடர் போராட்டங்களால் கடந்த 2017-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்தநிலையில் தேவர்கண்டநல்லூர் அருகே உள்ள உச்சிமேடு பகுதியை சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்துள்ளது. பல முறை புகார் அளித்தும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் துறையையும், தமிழக அரசையும் கண்டிக்கும் விதமாகவும், மதுவுக்கு எதிராகவும் அப்பகுதி இளைஞர்கள் பேனர் ஒன்றை தேவர்கண்டநல்லூர் கடைத்தெருவில் வைத்துள்ளனர்.
சொந்த ஜாமீன்
இது தொடர்பாக உச்சிமேடு பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டியன் (வயது 26) என்பவரை கொரடாச்சேரி போலீசார் கைது செய்தனர். அந்த பேனரையும் போலீசார் அகற்றினர்.
கைது செய்யப்பட்ட செல்லப்பாண்டியனை, நன்னிலம் கோர்ட்டில் நீதிபதி ஜெகதீசன் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது மதுவுக்கு எதிராக பேனர் வைப்பது சட்டவிரோத செயலா? என போலீசாரிடம், கேள்வி எழுப்பிய நீதிபதி, போலீசாருக்கு கடும் கண்டனமும் தெரிவித்தார். பின்னர் நீதிபதி, செல்லப்பாண்டியனை தனது சொந்த ஜாமீனில் விடுவித்தார்.
Related Tags :
Next Story