தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வைகோ உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வு


தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வைகோ உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 12 July 2019 5:00 AM IST (Updated: 12 July 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வைகோ உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வைகோ உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு சட்டசபை செயலாளர் சான்றிதழ் வழங்கினார்.

தி.மு.க. வேட்புமனு

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

தி.மு.க. சார்பில் மு.சண்முகம், பி.வில்சன் மற்றும் தி.மு.க. ஆதரவுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் 6-ந் தேதியன்று வேட்புமனுவை தேர்தல் அதிகாரியும் சட்டசபை செயலாளருமான கி.சீனிவாசனிடம் தாக்கல் செய்தனர்.

வைகோவுக்கு எதிராக கோர்ட்டு வழங்கிய தீர்ப்பையடுத்து சந்தேகத்தின் பேரில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோவையும் மற்றொரு வேட்பாளராக தி.மு.க. நிறுத்தியது.

அ.தி.மு.க. வேட்புமனு

அ.தி.மு.க. கட்சி சார்பில் ந.சந்திரசேகரன், முகமது ஜான் மற்றும் அ.தி.மு.க. ஆதரவுடன் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் 8-ந் தேதியன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்புமனு பரிசீலனையின்போது அவர்கள் 7 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டு, சுயேச்சைகள் 4 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

6 பேர் பெயர்கள் அறிவிப்பு

வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து என்.ஆர்.இளங்கோ தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார். 6 காலியிடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்திருந்ததால் போட்டி இல்லாமல் போனது.

இதைத்தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி கி.சீனிவாசன் நேற்று மாலை அறிவித்தார்.

சான்றிதழ் பெற்றனர்

அதைத் தொடர்ந்து ந.சந்திரசேகரன், முகமது ஜான், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. ஆகியோர் வந்தனர்.

3 பேருக்கும் எம்.பி. சான்றிதழ்களை கி.சீனிவாசன் வழங்கினார். பின்னர் அவர்கள் கையெழுத்துவிட்டு புறப் பட்டுச் சென்றனர். பின்னர் வைகோ, மு.சண்முகம், பி.வில்சன் ஆகியோர் வந்தனர். அவர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் வந்தனர். அவர்களும் கி.சீனிவாசனிடம் எம்.பி. சான்றிதழ்களை பெற்றனர்.

நினைவிடத்தில் அஞ்சலி

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க.வை சேர்ந்த தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து மு.க.ஸ்டாலினோடு வைகோ உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதி நினைவிடத்திலும் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர்கள் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அவருடைய உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து வைகோ, மு.சண்முகம், பி.வில்சன் ஆகியோர் மு.க.ஸ்டாலின் உடன் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story