மாநில செய்திகள்

பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த அவகாசம் வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் அரசு கோரிக்கை + "||" + 10 per cent reservation should be given time to implement

பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த அவகாசம் வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் அரசு கோரிக்கை

பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த அவகாசம் வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் அரசு கோரிக்கை
பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை,

கன்னியாகுமரி மாவட்டம் இளஞ்சிறையை சேர்ந்த கிருஷ்ணன் நாயர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் இயற்றி உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான கலந்தாய்வு, முதல் கட்டமாக கடந்த 5-ந் தேதியில் இருந்து நடக்கிறது.

நான் நீட் தேர்வில் 320 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். மேலும் மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்சாதியினருக்கு வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்கீழ் தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில், மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இருந்தேன். கலந்தாய்வில் பங்கேற்குமாறு இதுவரை எந்த தகவலும் வரவில்லை. விசாரித்ததில் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டம் பின்பற்றவில்லை என தெரியவந்தது.

பிற மாநிலங்களில் இந்திய மருத்துவ கழகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இந்த முறை பின்பற்றப்படாததால் எனது மருத்துவ கனவு சிதைந்துவிட்டது. எனவே மத்திய அரசின் 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்திய பிறகு, அதன் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அவகாசம் வழங்க வேண்டும்

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “மத்திய அரசின் 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த கொள்கை முடிவையும் எடுக்கவில்லை. அதுதொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து முடிவெடுக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்று வாதாடினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.