சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு மனிதநேய மையத்தில் படித்த 110 பேர் தேர்ச்சி


சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு மனிதநேய மையத்தில் படித்த 110 பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 12 July 2019 10:45 PM GMT (Updated: 12 July 2019 7:59 PM GMT)

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் மனிதநேய மையத்தில் படித்த 110 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

சென்னை,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்பட 26 பணிகளை உள்ளடக்கிய சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. இந்த சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வு, முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என்ற அடிப்படையில் நடக்கும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி அறிவிப்பு வெளியானது. 896 பணியிடங்களுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் 72 நகரங்களில் கடந்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தேர்வு முடிவு வெளியீடு

இந்தநிலையில் முதல் நிலை தேர்வு முடிவு நேற்று வெளியானது. தேர்வு முடிவுகள் https://upsc-o-n-l-i-ne.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதல்நிலை தேர்வில் சைதைதுரைசாமியின் மனிதநேய மையத்தில் இலவசமாக படித்த 110 பேர் தேர்வு ஆகி இருக்கின்றனர்.

இதுகுறித்து மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 110 பேரில் 69 ஆண்கள், 41 பெண்கள் ஆவர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மனிதநேய மையத்தில் பயிற்சி பெறாத மாணவ-மாணவிகள் இதில் கலந்து கொள்ளலாம்.

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் ‘எண்.28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி. நகர், சென்னை-35’ என்ற மனிதநேய பயிற்சி மைய அலுவலகத்துக்கு நேரில் வந்து 13-ந்தேதி (இன்று) முதல் பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தங்கும் இடம், உணவு, போக்குவரத்து ஆகியவை இலவசமாக செய்து தரப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

முதன்மை தேர்வு

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்தக்கட்டமாக முதன்மை தேர்வுக்கு https://upsc-o-n-l-i-ne.nic.in என்ற மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (யு.பி.எஸ்.சி) ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 16-ந்தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தேர்வர்களின் சுயவிவரங்கள், விருப்ப பாடப்பிரிவுகள் உள்பட சில விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

முதன்மை தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் முதன்மை தேர்வு நடத்தப்பட உள்ளது. முதன்மை தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தக்கட்டமாக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வார்கள்.

Next Story