மாநில செய்திகள்

கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்தியது யார்? சட்டசபையில் காரசார விவாதம் + "||" + Who conducted the co-operative election honestly?

கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்தியது யார்? சட்டசபையில் காரசார விவாதம்

கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்தியது யார்? சட்டசபையில் காரசார விவாதம்
கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்தியது யார் என்பது குறித்து சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.
சென்னை,

சட்டசபையில் நேற்று கைத்தறி மற்றும் கதர் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் சுந்தர் (உத்திரமேரூர்) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

டெபாசிட்டை இழந்தீர்கள்

சுந்தர் (தி.மு.க.):-நாடாளுமன்ற தேர்தலில் 23 சூரியன்களை உதிக்க செய்தவர் மு.க.ஸ்டாலின். தமிழக தேர்தல் வரலாற்றிலேயே 52 சதவீத வாக்குகளை பெற்று தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 1½ கோடி தொண்டர்களை வைத்திருக்கிறோம் என்று சொல்பவர்கள், குறைவான வாக்குகளை பெற்று இருக்கிறார்கள். இந்தியாவில் 3-வது பெரியக்கட்சி என்று சொன்னீர்கள், அந்தநிலை மாறி விட்டது. 39-ல் 38 இடங்களை நாங்கள் வென்று இருக்கிறோம். ஆனால் நீங்கள் ஒரு இடத்தில் மட்டும் தான் வெற்றி பெற்று இருக்கிறீர்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. டெபாசிட்டை இழந்தது. இதை உறுப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எங்களை பொறுத்தவரையில் அடுத்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.

சுந்தர்(தி.மு.க.):- உங்கள் கூட்டணி வட சென்னை, திருச்சியில் டெபாசிட்டை பறி கொடுத்தது.

அமைச்சர் செங்கோட்டையன்:-மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசாமல் உறுப்பினர் அரசியல் பேசுகிறார். அவர் பேசினால் பதிலுக்கு நாங்களும் அரசியல் பேச வேண்டியது வரும். எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த பிறகு உங்களால் பல ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியவில்லை.

வேலூரில் வெற்றி பெறுவோம்

சக்கரபாணி (தி.மு.க. கொறடா):-2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் 40 இடங்களிலும் வெற்றி பெற்றோம். உங்களால் ஒரு இடத்தை கூட பெற முடியவில்லை.

அமைச்சர் செங்கோட்டையன்:-2014-ல் உங்களால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லையே?.

அமைச்சர் ஜெயக்குமார்:-அரசியலில் வெற்றி, தோல்வி மாறி, மாறி வரும். அதேநேரத்தில் அரசியலில் அதிக தோல்வி கண்ட இயக்கம் தி.மு.க. தான். ஆளும் கட்சியாகவும், ஆளுகின்ற கட்சியாகவும், எதிர்காலத்திலும் ஆளுகின்ற கட்சியாகவும் இருப்பது அ.தி.மு.க. தான். தேர்தல் நேரத்தில் நீங்கள் சொன்ன வாக்குறுதிகளை அளவிட முடியாது. மக்களை ஏமாற்றி பெறப்பட்ட வெற்றி அது. இது எங்களுக்கு தற்காலிக தோல்வி தான். சொல்லப்போனால் உங்களை பொறுத்தவரையில் ஆபரேஷன் சக்சஸ், பேஷண்ட் டைடு.

சுந்தர் (தி.மு.க.):-நீங்கள் என்ன தான் சொல்லிக்கொண்டு இருந்தாலும், வேலூரில் சூரியனை எங்கள் தலைவர் உதிக்க வைப்பார். தி.மு.க. அங்கு வெற்றி பெறும்.

கோட்டையில் இடமில்லை

அமைச்சர் ஜெயக்குமார்:-எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் உங்களால் ஆட்சிக்கு வர முடியவில்லை. இனியும் கோட்டையில் தி.மு.க.வுக்கு இடமில்லை.

சுந்தர் (தி.மு.க.):-எங்கள் தலைவர் (கருணாநிதி) தோல்வியே அடையாதவர்....

அமைச்சர் செங்கோட்டையன்:- 234 தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி வாகை சூடியவர் ஜெயலலிதா.

துணை சபாநாயகர்:-உறுப்பினர் மானியக்கோரிக்கையில் பேசுங்கள்.

சுந்தர் (தி.மு.க.):-திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரையும், காஞ்சீபுரம் ரெயில் நிலையத்திற்கு அண்ணா பெயரையும் வைக்க வேண்டும். செய்யூரில் அனல் மின்நிலையம் அமைக்க வேண்டும். வாலாஜாபாத்தில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் மந்தமாக இருக்கிறது. சுங்கசாவடியை அகற்ற வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-வாலாஜாபாத் புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக இடம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. சுங்கசாவடியை பொறுத்தவரையில் மத்தியில் உங்கள் கூட்டணி ஆட்சி இருந்தபோது கொண்டு வரப்பட்டது. அப்போது விட்டு விட்டீர்கள்.

உள்ளாட்சி தேர்தல்

சுந்தர்:-தாம்பரம்-பல்லாவரத்தை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இதுவரைக்கும் நடக்கவில்லை. தண்ணீர் பிரச்சினை அதிகரித்து விட்டது. ஆட்சி காலத்தையும் 2021 ஆண்டு வரை நீடிக்க முடிவு செய்து விட்டீர்கள். தேர்தலை சந்திக்க உங்களுக்கு தைரியம் இல்லை, உள்ளாட்சி தேர்தலையாவது நடத்துங்கள்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:-உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராகத் தான் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புபடி தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். உள்ளாட்சி தேர்தலுக்கும், தண்ணீர் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

சுந்தர் (தி.மு.க.):-காஞ்சீபுரம் பட்டு பூங்காவை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். கைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:-மத்திய, மாநில அரசு நிதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. பயனாளிகள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டியுள்ளது. எனவே உறுப்பினர் பயனாளிகளிடம் பேசி பார்க்கலாம். கைத்தறி நெசவாளர்களுக்கு இந்த ஆண்டு கூலி உயர்வு வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

பெண்கள் மனநிலை மாறி விட்டது

சுந்தர் (தி.மு.க.):-கூட்டுறவு சங்கங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அண்ணா கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்ததாக பணியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:-1,131 கூட்டுறவு சங்கங்களில் 179 சங்கங்கள் மட்டும் தான் நஷ்டத்தில் இயங்குகிறது. மற்ற சங்கங்கள் லாபத்தில் இயங்கி வருகிறது. காஞ்சீபுரம் அண்ணா கூட்டுறவு சங்கங்களின் அறிக்கை வெளி வந்திருப்பது உண்மை. இது குறித்து மறு ஆய்வு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுந்தர்:-இந்த சங்கத்தில் விளம்பரம் மட்டும் ரூ.1 கோடிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பட்டு ஜரிகை புடவை உள்ளிட்ட துணிகளை இருப்பு வைத்துக்கொண்டு தள்ளுபடி என்ற பெயரில் சங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:-இப்போது எல்லாம் பெண்களின் மனநிலை மாறி விட்டது. புடவைக்கு பதில் சுடிதார் உள்ளிட்ட ஆடைகளைத் தான் விரும்புகிறார்கள். ஜரிகை புடவை எடுக்க வரும் பெண்கள் ஒரு புடவை மட்டும் பார்த்து விட்டு எடுத்து விட்டு சென்று விடுவதில்லை. 20 ஜரிகை புடவை காட்டினால்தான் அதில் ஒன்றை தேர்வு செய்வார்கள். எனவேதான் ஜரிகை புடவை இருப்பு வைக்க வேண்டியுள்ளது.

நேர்மையாக நடத்தினோம்

அமைச்சர் செல்லூர் ராஜூ:- கூட்டுறவு சங்க விதியில் தி.மு.க. கொண்டு வந்த சட்ட திருத்தத்தால்தான் தவறு இழைத்தவர்கள் மீண்டும் தலைவர்களாக வரும் நிலை உருவானது. ஆனால் இதை ஜெயலலிதா மாற்றினார். கூட்டுறவு சங்கத்திற்கு வாழ்வு கொடுத்தார்.

சுந்தர்(தி.மு.க.):-கூட்டுறவு சங்க தேர்தலை நீங்கள் நியாயமாக நடத்தியிருந்தால் பாதிக்கு மேல் நாங்கள் தான் வெற்றி பெற்று இருப்போம். வேட்டி, சேலை திட்டத்தில் ஒருவருக்கு வேட்டி வழங்கப்பட்டால், சேலை வழங்கப்படுவதில்லை.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:-தவறாக சொல்ல கூடாது. எல்லோருக்கும் சரியாகவே வழங்குகிறோம். வேட்டி-சேலை வழங்கலை முறையாக கவனிக்கிறோம்.

அமைச்சர் செல்லூர் ராஜூ:-ஜனநாயக முறைப்படி, நேர்மையாக நாங்கள் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தினோம்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-கூட்டுறவு சங்க தேர்தலை 22 ஆண்டுகளாக நடத்த விடாமல் செய்தவர்கள் நீங்கள்தான். ஜெயலலிதாதான் கோர்ட்டுக்கு சென்று, தேர்தல் நடத்தும் உரிமையை பெற்றார். நீங்கள் தேர்தலை நடத்தியபோது அ.தி.மு.க. உறுப்பினர்களாக பார்த்து, பார்த்து நீக்கினீர்கள்.

விவாதம் தவிர்க்கப்படும்

சுந்தர் (தி.மு.க.):-துணை முதல்-அமைச்சர் தவறான தகவலை தெரிவிக்கிறார். அமைச்சர்கள் எல்லோரும் திறமையானவர்கள்....

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-எங்கள் திறமையை நீங்கள் பாராட்ட தேவையில்லை. எங்களை உருவாக்கியவருக்கு தெரிந்ததால்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-உறுப்பினர்கள் மானியக்கோரிக்கை விவாதத்திலேயே பேசினால் வீண் விவாதம் தவிர்க்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.