கர்நாடகத்தில் கட்சித்தாவல் சட்டம் பாயாமல் அடைக்கலமாக உள்ளது - ப.சிதம்பரம்


கர்நாடகத்தில் கட்சித்தாவல் சட்டம் பாயாமல் அடைக்கலமாக உள்ளது - ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 13 July 2019 6:26 PM GMT (Updated: 13 July 2019 6:26 PM GMT)

கட்சித்தாவல் சட்டம் பாயாமல் அடைக்கலமாக உள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.

ராமநாதபுரம்

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ்–மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியை குறுக்கு வழியில் கலைக்க முயற்சிப்பதாக மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து பரமக்குடி பாரதிநகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்.

இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ., முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அப்போது முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:–

ஜனநாயகத்திற்கு பேராபத்து வந்துள்ளது. கர்நாடகாவில் தொடங்கி பல மாநிலங்களில் பா.ஜ.க. அல்லாத ஆட்சியை கலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல். ஒரே கட்சி, ஒரே வேட்பாளர் என உலகில் பல நாடுகள் சர்வாதிகாரத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறது. அதை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. கட்சித்தாவல் தடை சட்டம் உள்ளது. ஆனால் அந்த சட்டம் பாயாமல் அடைக்கலமாக உள்ளது.

கட்சி தாவாமல் பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் சேருங்கள். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். நீங்களே வேட்பாளராக நில்லுங்கள். நாங்கள் பணத்தை செலவு செய்து வெற்றி பெற வைக்கிறோம், மந்திரி பதவி தருகிறோம் என ஆசை வார்த்தைகளை கூறி பா.ஜ.க. குதிரை பேரங்களை நடத்தி வருகிறது. இந்தியா ஜனநாயக நாடு. அதை சீர்குலைக்க நினைக்கும் பா.ஜ.க.வை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story